காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது! சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக பிகாரில்...
பிகார் மாநிலம், பாட்னாவில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார்.
சூடுபிடிக்கும் பிகார் தேர்தல்
பிகார் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம் பாட்னாவில் நடைபெறுவது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக, காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம் பிகாரில் 1940 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில், சுதந்திரத்துக்குப் பிறகு தற்போது கூடியுள்ளது.
இந்திய சுதந்திர இயக்கத்தின் முக்கிய மையமாக கருதப்படும் சதகத் ஆசிரமத்தில் நடைபெற்று வரும் செயற்குழுக் கூட்டத்தில், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி உள்பட 170 நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தின் முடிவில், வாக்குத் திருட்டு, பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் உள்ளிட்டவைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பிகார் தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்தும், ஆர்ஜேடி - காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
கடந்த மாதம் பிகாரில் ராகுல் காந்தி தலைமையில் 16 நாள்கள், 1,300 கி.மீ. தொலைவுக்கு நடத்தப்பட்ட வாக்காளர் உரிமைப் பேரணி குறித்தும் ஆலோசனை செய்யப்படவுள்ளது.
தெலங்கானா வியூகம்
தெலங்கானா மாநிலத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தின் முடிவில், பொதுக் கூட்டம் கூட்டப்பட்டு, சோனியா காந்தி உரையாற்றினார். அந்த கூட்டத்திலேயே தேர்தல் வாக்குறுதிகளும் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து, தேர்தலில் ஆளுங்கட்சியான பாரத ராஷ்டிர சமிதியை தோற்கடித்தது, ரேவந்த் ரெட்டியின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.