காங்கோவில் 500க்கும் மேற்பட்டோர் பலி! மர்ம நோயல்ல; மலேரியா நோய்தான்!
காங்கோவில் பரவிவரும் மர்மநோயை மலேரியாதான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
காங்கோவில் ஒருமாத காலமாக மர்ம நோயால் பலரும் பலியாகி வந்த நிலையில், நோய்க்கான காரணத்தை உலக சுகாதார அமைப்பு கண்டறிந்தது. அக்டோபர் மாதத்தில் இருந்து காங்கோவில் சுமார் 600 பேர் வரையில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு பலியாகினர். மேலும், இந்த நோயால் 200-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், கடும் தலைவலி, சளி, உடல் வலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக காங்கோவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, 6.2 சதவிகிதம் இறப்பு விகிதம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியது.
இந்த நிலையில், காங்கோவில் அதிகளவில் பரவிவரும் இந்த மர்ம நோய்க்கான விளக்கத்தை உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது. காங்கோவில் பரவி வருவது மர்ம நோயல்ல; மலேரியா நோய்தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட பலரைத்தான் இந்த நோய் தாக்கியுள்ளது. மலேரியாவும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடும்தான் நோயின் தாக்கத்தை வீரியமடையச் செய்துள்ளது.
இந்த நோயால் பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் பாதிக்கும் அதிகமானோர் 5 வயதுக்குள்பட்டவர்களே.