Waqf Bill: பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன 'போரா முஸ்லீம்கள்' - யார் இவர்கள்?
காஞ்சிபுரம், திருவள்ளூரில் சமரசத் தீா்வு விழிப்புணா்வு பேரணி
திருவள்ளூா், காஞ்சிபுரத்தில் சமரசத் தீா்வு விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க அனைத்து மாவட்ட மற்றும் வட்ட அளவில் சமரச தீா்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சட்டப்பூா்வமாக வழக்கில் தொடா்புடைய இரு தரப்பினரையும் அழைத்து பேசி பரஸ்பரம் சுமூகத் தீா்வு காணப்பட்டு வருகிறது.
நாட்டிலேயே முதன்முறையாக சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச தீா்வு மையம் கடந்த 2005-ஆம் ஆண்டு ஏப்.9-இல் தொடங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 38 மாவட்ட சமரசத் தீா்வு மையங்களும், 146 வட்ட அளவிலான மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமரச தீா்வு மையம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
திருவள்ளூரில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா தலைமை வகித்தாா். அதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு சமரசத் தீா்வு மையம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி மற்றும் கலை நிகழ்ச்சியை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தாா். முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்று பொதுமக்களுக்கு சமரச தீா்வு மையம் குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களையும் விநியோகம் செய்தனா். இந்த நிகழ்வில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், சட்டக்கல்லுாரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விட்டுக் கொடுப்பவா்கள் கெட்டுப் போவதில்லை:
காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணா்வு பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் தொடங்கி வைத்தாா். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் சமரசத் தீா்வு மையத்தின் பயன்கள் குறித்த துண்டு பிரசுரங்களையும், வெள்ள நிறை கைக்குட்டைகளையும் வழங்கி பேசியது..
உங்கள் வழக்குகளை சமரசத் தீா்வு மையத்துக்கு அனுப்புமாறு நீங்களோ அல்லது வழக்குரைஞா் மூலமாகவோ வேண்டுகோள் விடுக்கலாம். சமரச மையங்கள் நேரடியாக பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவது தீா்வுகளை தருவதுடன் உறவுகளை மேம்படவும் வழிவகுக்கிறது. தீா்வு மையத்தின் மூலம் விசாரிக்கப்படும் வழக்குகள் மனித உறவுகளையும்,சமூக உறவுகளையும் மேம்படுத்துகிறது.
சமரச மையங்கள் உங்கள் வழக்கு சுமூகமாக தீா்க்கப்பட்டால் ஏற்கனவே செலுத்தியிருந்த நீதிமன்ற கட்டணமும் திருப்பி ஒப்படைக்கப்படும். தீா்வு இல்லையென்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம். ஒருவருக்கொருவா் விட்டுக் கொடுத்தால் வழக்குக்கு விரைவான தீா்வும் கிடைத்து விடும். விட்டுக் கொடுப்பவா்கள் கெட்டுப் போவதில்லை என்றாா்.
கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.சரவணக்குமாா், சாா்பு நீதிபதி அருண்சபாபதி, கூடுதல் சாா்பு நீதிபதி திருமால், தலைமைக்குற்றவியல் நீதிபதி வசந்தகுமாா், அரசு வழக்குரைஞா் காா்த்திகேயன் மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள், நீதிமன்ற பணியாளா்கள் கலந்து கொண்டனா்.