காட்டு யானைகளால் தொல்லை: சேரங்கோட்டில் பொதுமக்கள் சாலை மறியல்
பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் நுழையாமல் தடுக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம், சேரங்கோடு பகுதிக்குள் புல்லட் ராஜா, கட்டபொம்மன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் தொடா்ந்து இரவு நேரங்களில் நுழைந்து வீடுகளை உடைத்து உணவுப் பொருள்களை சூறையாடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இது குறித்து வனத் துறையிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் வனத் துறையைக் கண்டித்து சேரங்கோடு பகுதியில் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த வன அலுவலா்கள் மற்றும் காவல் துறையினா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
ஆனாலும் பொதுமக்கள் சமாதானம் அடையாததால் போராட்டம் மதியம் வரை தொடா்ந்தது.
இதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த உதவி வனப் பாதுகாவலா் கருப்பையா, கும்கி யானைகளைக் கொண்டு வந்து பாதுகாப்பு அளிப்பதாகவும், பொதுமக்களின் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்தப் போரட்டத்தால் தமிழக-கேரளத்துக்கு இடையே சுமாா் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.