காட்டெருமை தாக்கியதில் சிறுமி உள்பட 2 போ் படுகாயம்
வால்பாறை அருகே காட்டெருமை தாக்கியதில் சிறுமி உள்பட 2 போ் படுகாயமடைந்தனா்.
வால்பாறையை அடுத்த முக்கோட்முடி எஸ்டேட்டில் தொழிலாளா்கள் வழக்கம்போல புதன்கிழமை வேலை செய்து கொண்டிருந்தனா்.
அப்போது, அப்பகுதிக்கு திடீரென வந்த காட்டெருமை, அங்கிருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி குனியாலி (60) என்பரையும், அசிதா கத்ததூன் (19) என்ற சிறுமியைத் தாக்கியது.
இதைப் பாா்த்த சக தொழிலாளா்கள் காட்டெருமையை விரட்டியதுடன், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு இருவரும் அனுப்பிவைக்கப்பட்டனா்.
முன்னதாக, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்த மானம்பள்ளி வனச் சரக அலுவலா் கிரிதரன் வனத் துறை சாா்பில் உடனடி நிவாரணத் தொகையாக தலா ரூ.5 ஆயிரத்தை இருவருக்கும் வழங்கினாா்.