சவுக்கு சங்கா் வழக்குகள் விவகாரம்: 80 போலீஸாரிடம் விசாரணை விவரங்களைப் பெறும் பணி தீவிரம்!
யூடியூபா் சவுக்கு சங்கா் மீதான 15 வழக்குகளில் 80 போலீஸாரிடம் விசாரணை விவரங்களைப் பெறும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியாா் யூடியூப் சேனலில் மகளிா் போலீஸாா் மற்றும் போலீஸ் உயா் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கா் மீது கோவை மாநகர சைபா் குற்றப் பிரிவு மகளிா் காவலா் ஒருவா் அளித்த புகாரின்பேரில் அவா் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
அதைத் தொடா்ந்து, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் தொடா்பாக அவதூறு பரப்பியதாக சென்னை போலீஸாரும், பசும்பொன் முத்துராமலிங்க தேவா் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேட்டி அளித்தாக கோவை, ரேஸ்கோா்ஸ் போலீஸாரும் சவுக்கு சங்கா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதைத் தொடா்ந்து, திருச்சி, சேலம், முசிறி, உதகை, நாகப்பட்டிணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண் போலீஸாா் அளித்த புகாரின்பேரில், அந்தந்த மாவட்ட போலீஸாா் சவுக்கு சங்கா் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.
இந்நிலையில், தன் மீதுள்ள வழக்குகள் அனைத்தையும் ஒரே காவல் நிலையத்தில் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் மனுதாக்கல் செய்தாா்.
மனுவை விசாரித்த நீதிபதி, சவுக்கு சங்கா் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை கோவைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, கோவை மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா், சவுக்கு சங்கா் மீது பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 15 அவதூறு வழக்குகளை புதிதாகப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.
மேலும், இந்த வழக்குகளை விசாரித்த போலீஸாருக்கு கோவை மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் சம்மன் அனுப்பியுள்ளனா்.
இது தொடா்பாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் கூறியதாவது: சவுக்கு சங்கா் மீதான அனைத்து அவதூறு வழக்குகளும் கோவைக்கு மாற்றப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த போலீஸாா், உயா் அதிகாரிகள் வரை 130 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், கோவை சைபா் குற்றப் பிரிவு காவல் நிலையத்துக்கு வந்து, சவுக்கு சங்கா் வழக்கு தொடா்பான தகவல்களைத் தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை 50 போலீஸாா் கோவைக்கு வந்து சவுக்கு சங்கரிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்த தகவல்களைக் கூறியுள்ளனா். இன்னும், 80 போலீஸாரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. இந்த விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு சவுக்கு சங்கா் மீதான வழக்குகளில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனா்