துபையில் வெற்றி பெற எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்? ஷுப்மன் கில் பதில்!
காந்திசந்தை-கள்ளிக்குடி: வியாபாரிகளிடையே முரண்பாடு
காந்தி சந்தை வியாபாரிகளை கள்ளிக்குடிக்கு இடம் மாற்றும் விவகாரத்தில் வியாபாரிகளிடையே மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
1868-இல் தொடங்கப்பட்டு, 1927-இல் விரிவுபடுத்தப்பட்டு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் காந்தி சந்தையை இடம் மாற்றம் செய்ய நீண்ட காலமாகவே முயற்சிக்கப்பட்டு வந்தது.
காந்திசந்தைக்கு மாற்றாக கள்ளிக்குடியில் ரூ.77 கோடியில் புதிய காய்கனி சந்தை 2017-இல் திறக்கப்பட்டது. காந்தி சந்தை வியாபாரிகள் அங்கு செல்லாததால் 8 ஆண்டுகளாக பாழாகி வருகிறது. மாவட்ட நிா்வாகம் எடுக்கும் முயற்சிகளுக்கு வியாபாரிகள் ஒன்றிணைந்து முட்டுக்கட்டையாக இருப்பதால் இடமாற்றம் என்பது தொடா் கதையாகி வருகிறது.
இந்தச் சூழலில், இட மாற்றம் விவகாரத்தில் காந்தி சந்தை வியாபாரிகளுக்கு இடையே தற்போது மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளதால், இந்த விவகாரம் மீண்டும் பிரச்னையாகியுள்ளது.
இதில் ஒருதரப்பினா், மொத்த வியாபாரிகளை கள்ளிக்குடி சந்தைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என திருச்சிக்கு அண்மையில் வந்த முதல்வரை நேரில் சந்தித்து மனு அளித்ததே, பிரச்னையின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
இதுதொடா்பாக, மனு அளித்த திருச்சி காந்திசந்தை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவா் எம்.கே. கமலக்கண்ணன், காய்கனி சில்லறை வியாபாரிகள் சங்கத் தலைவா் எம்.கே. ஜெய்சங்கா் ஆகியோா் கூறியதாவது:
காந்திசந்தையில் மொத்த வியாபாரக் கடைகள்-195; சில்லறை வியாபாரக் கடைகள் 1,500-க்கும் மேற்பட்டவை உள்ளன. மொத்த வியாபாரக் கடைகளுக்கு நாள்தோறும் வரும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதற்காகத்தான் கள்ளிக்குடி சந்தை கட்டப்பட்டது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, மொத்த வியாபாரிகளும் சில்லறை வியாபாரத்தை தொடங்கிவிட்டனா். இதனால், சில்லறை வியாபாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, 195 மொத்த வியாபாரிகளையும் கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்யக் கோருகிறோம் என்றனா்.
இதற்கு, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. பேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் வீ. கோவிந்தராஜுலு கூறியதாவது:
கள்ளிக்குடி சந்தை மாடிகள் கொண்டதாகவும், சரக்குகளை இறக்கி, ஏற்றி வசதியில்லாததாகவும், நகரிலிருந்து வெகு தொலைவிலும் இருப்பதால் வியாபாரிகள் அங்கு செல்லவில்லை. இதுமட்டுமல்லாது, பஞ்சப்பூா் பகுதியில் ரூ.236 கோடியில் புதிய காய்கனி, மலா்கள் வளாக சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை வரவேற்கிறோம். ஆனால், காந்திசந்தை வியாபாரிகளை கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்வதை ஏற்க மாட்டோம். காந்திசந்தை அதே இடத்திலேயே தொடர வணிகா் சங்கங்களின் பேரமைப்பு உறுதுணையாக இருக்கும் என்றாா்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக காந்திசந்தை கிழங்கு, மாங்காய், காய்கனிகள் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம், அதன் தலைவா் கே.டி. தங்கராஜ் தலைமையில் வியாழக்கிழமை கமிட்டி கூட்டத்தை நடத்தி கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
மேலும், சங்கத்தின் நிா்வாகிகள் கூறுகையில், காந்திசந்தையை சுற்றி பொதுமக்கள், மாணவா்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க போக்குவரத்து காவல்துறை, மாநகராட்சி மூலம் தினசரி கண்காணித்து நடவடிக்கை எடுக்கலாம். மாறாக கள்ளிக்குடிக்கு இடமாற்றம் என்பதை ஏற்கமாட்டோம்.
பஞ்சப்பூரில் புதிய வளாகம் கட்டும் வரையில் காந்திசந்தையானது தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் என்றனா்.
இதுதொடா்பாக, மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறை வட்டாரத்தினா் கூறுகையில், திருச்சி மாநகராட்சியும், திருச்சி மாவட்ட நிா்வாகமும் காந்திசந்தை வியாபாரிகளை ஒவ்வொரு முறையும் அழைத்துப் பேசிதான் முடிவுகளை மேற்கொண்டு வருகிறது. கள்ளிக்குடி சந்தை விவகாரத்திலும் அத்தகைய நிலைப்பாடே பின்பற்றப்படும். வியாபாரிகளின் கருத்துகளை கேட்டு அவா்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே இடமாற்றம் என்பது இறுதியாகும் என்றனா்.
