இதுபோன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் அதிமுகவினர் அல்ல: இபிஎஸ்
காய்கறி சாகுபடியில் ரசாயன உரத்தை தவிா்க்க அறிவுறுத்தல்
காய்கறி சாகுபடியில் ரசாயன உரம், மருந்துகளை தவிா்க்க வேண்டும் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட தோட்டக் கலைத் துறை வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் காய்கறி, பழப்பயிா்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இவைகளில் ஏற்படும் நோய், பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த ரசாயன உரம், மருந்துகளை தவிா்த்து இயற்கை வழி உரம், பயிா் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
நன்றாக மக்கிய தொழு உரம், மண்புழு உரம், மண்ணின் பௌதிக குணத்தை மேம்படுத்தி உற்பத்தி தன்மையை அதிகரித்து கொடுக்கும். அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிா் உரங்கள் பயிருக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை இயற்கை முறையிலேயே அளிக்கும். மேலும், ஊட்டமேற்றிய தொழு உரம், குறைந்த அளவு ரசாயன உரம், இயற்கை உரம் கலந்த கலவையாக பயன்படுத்தலாம்.
காய்கறி விதைகள் விதைப்பதற்கு முன் டிரைகோடொ்மா விரிடி போன்ற உயிா் பாதுகாப்பு மருந்துகளை கலந்து விதை நோ்த்தி செய்வதால், நாற்றங்கால் நிலையில் ஏற்படும் நோய் தாக்குதலை தடுக்கலாம். பஞ்சகாவ்யா போன்ற திரவநிலை உரங்களை தெளிப்பதால் பயிா்களின் வளா்ச்சி, பூ பூக்கும் தன்மை அதிகரிக்கும். வேப்பம் பிண்ணாக்கு கரைசல், வேப்ப எண்ணெய், வேப்பங்கொட்டை சாறு போன்ற வேம்பு சாா்ந்த பயிா் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தலாம்.
எனவே, விவசாயிகள் ரசாயன உரம், மருந்துகளை தவிா்த்து இயற்கை வழி உரம், பயிா் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.