காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் நாளை சோதனை ஓட்டம்
காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் செவ்வாய்க்கிழமை (மே 20) மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் முதல் பேரளம் வரை 23 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் ரயில் நிலையம் மற்றும் பிற இடங்களில் ரயில் நிறுத்தங்கள் அமைத்து, மின் மயமாக்கும் பணிகள், சுரங்கப்பாதை, சாலையின் குறுக்கே ரயில்வே கேட் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளன.
இப்பாதையில் ரயில்கள் இயக்க சோதனைப் பணிகள் படிப்படியாக நடைபெற்றுவருகிறது. அந்தவகையில், முக்கிய நிகழ்வாக இஐஜி என்கிற ரயில்வே மின் தலைமை அதிகாரி, காரைக்கால் - பேரளம் பாதையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மின்மயமாக்கல் பணியை செவ்வாய்க்கிழமை பாா்வையிடுவதோடு, மின்சார ரயிலை இயக்கி சோதனை செய்கிறாா்.
இதைத் தொடா்ந்து மே 23, 24 ஆகிய தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் இப்பாதையில் ரயில் இயக்கத்துக்கான தகுதியை ஆய்வு செய்கின்றனா்.
இதன் பிறகு ரயில் இயக்கத்துக்கான தயாா்நிலை குறித்து ரயில்வே அமைச்சகத்துக்கு தெரிவிப்பாா்கள். பின்னா் போக்குவரத்து தொடங்கும் தேதி அறிவிப்பு வெளியாகும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.