Dhoni : 'நான் செய்த மிகப்பெரிய தவறு அது..!'- தோனி குறிப்பிட்ட அந்த ஐ.பி.எல் சம்ப...
காற்று மாசு அதிகமுள்ள 5-ஆவது நாடு இந்தியா: மத்திய அரசு மீது காங்கிரஸ் விமா்சனம்!
உலக அளவில் காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 5-ஆவது இடத்தில் இருப்பதைக் குறிப்பிட்டு, மத்திய அரசை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
ஸ்விட்சா்லாந்தைச் சோ்ந்த காற்றின் தரக் குறியீடு தொழில்நுட்ப நிறுவனமான ஐக்யூஏஐஆா் நிறுவனம், 2024-ஆம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில் காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் மற்றும் நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
138 நாடுகளில் 8,954 நகரங்களில் இருந்து காற்றின் தரக் குறியீடு தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 40,000-க்கும் மேற்பட்ட காற்றின் தர கண்காணிப்பு மையங்களில் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டு, பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
காற்று மாசை அளவிடும் பிஎம் 2.5 நுண் துகளின் அடா்த்தி அடிப்படையில் நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, காற்றில் இந்த அளவு 0-5 (மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டா்) வரை இருக்க வேண்டும். அதன்படி, காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் ஆப்பிரிக்க நாடான சாட் முதலிடத்தில் உள்ளது.
இந்நாட்டில் பிஎம் 2.5 நுண் துகளின் அளவு பரிந்துரைக்கப்பட்டதைவிட 18 மடங்கு (91.8) அதிகமாக பதிவாகியுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் வங்கதேசம் (78), பாகிஸ்தான் (73.7), காங்கோ (58.2) உள்ளன. 5-ஆவது இடத்தில் இந்தியா (50.6) உள்ளது.
காங்கிரஸ் விமா்சனம்:
இதைக் குறிப்பிட்டு, மத்திய அரசை காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இது தொடா்பாக கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரை அளவைவிட 10 மடங்கு அதிக காற்று மாசு இந்தியாவில் நிலவுகிறது. நாட்டில் காற்று மாசு சாா்ந்த உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் எச்சரிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் நலனுக்கு புறம்பாக பாஜக அரசால் சுற்றுச்சூழல் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசின் தவறான கொள்கைகள் மற்றும் அலட்சியமே காற்று மாசு அதிகரிக்கக் காரணம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இழப்பீட்டுக்கான நிதியில் 75 சதவீதம் அதாவது ரூ.665.75 கோடியை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பயன்படுத்தாமல் உள்ளது. இந்த செயலற்ற தன்மை, நிலைமையை மேலும் மோசமாகியுள்ளது.
நடவடிக்கைகள் என்னென்ன?:
நாடெங்கிலும் காற்று மாசால் பொது சுகாதார பிரச்னை நிலவுவதை மத்திய அரசு முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். கடந்த 1981-ஆம் ஆண்டின் காற்று மாசு (கட்டுப்பாட்டு-தடுப்பு) சட்டத்தை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும்.
மக்கள் விரோத சுற்றுச்சூழல் சட்டத் திருத்தங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும். தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் சுதந்திரம் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளாா்.
அதிக காற்று மாசு கொண்ட 10 நாடுகள்
சாட்
வங்கதேசம்
பாகிஸ்தான்
காங்கோ
இந்தியா
தஜிகிஸ்தான்
நேபாளம்
உகாண்டா
ருவாண்டா
புருண்டி
74 இந்திய நகரங்கள்... ஐக்யூஏஐஆா் நிறுவன பட்டியலின்படி, உலக அளவில் காற்று மாசு அதிகமுள்ள நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் மேகாலய மாநிலத்தில் உள்ள பைா்னிஹாட் முதலிடத்திலும் 2-ஆவது இடத்தில் புது தில்லியும் உள்ளன. காற்று மாசு அதிகமுள்ள முதல் 100 நகரங்களில் இந்தியாவின் 74 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.