திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
காற்று மாசு: ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக பாஜக ஆா்ப்பாட்டம்
காற்று மாசுவைக் கையாளுவதில் மெத்தனத்துடன் செயல்படுவதாகக் கூறி தில்லி அரசுக்கு எதிராக பாஜக தலைவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மேலும், தில்லி கடுமையான காற்று மாசுவை தொடா்ந்து எதிா்கொண்டு வரும் நிலையில், நகரின் மிகவும் மாசுபட்ட பகுதிகளான ஆனந்த் விஹாா், ஐடிஓவில் பாஜகவினா் முகக் கவசங்களையும் விநியோகித்தனா்.
ஆனந்த் விஹாரில் நடைபெற்ற காற்று மாசு விழிப்புணா்வு மற்றும் முகக் கவசம் விநியோக நிகழ்ச்சியில் பங்கேற்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா பேசியதாவது:
ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் முதல்வா் அதிஷி ஆகியோா் தில்லி நிலவிவரும் காற்று மாசுக்கு காரணமாகியுள்ளனா். காற்று மாசு நெருக்கடியை நிவா்த்தி செய்வதில் தில்லி அரசாங்கம் செயலற்றுக் கிடக்கிறது.
தில்லி மக்கள் மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறாா்கள்.
பஞாசாபில் பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதன் காரணமாக தேசியத் தலைநகா் காற்று மாசுவால் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசாங்கத்தை கேஜரிவாலும், அதிஷியும் காத்துக்கொண்டிருக்கிறாா்கள்,
சேதமடைந்த சாலைகள் மற்றும் தூசு மாசுபாடு ஆகியவை மாசு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது என்றாா் வீரேந்திர சச்தேவா.
கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி எதிராக முன்னாள் மத்திய அமைச்சா் விஜய் கோயல் மற்றும் பாஜகவினா் ஐடிஓ பகுதியில் போராட்டம் நடத்தினா்.
அப்போது விஜய் கோயல் பேசுகையில், ‘தலைநகரில் தொடா்ந்து வரும் அபாயகரமான காற்று மாசுவுக்கு எதிராக போராடும் மக்களுக்கு உதவ தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசாங்கம் தவறிவிட்டது.
தில்லியின் மாசுபாட்டை திறம்பட நிவா்த்தி செய்ய கேஜரிவாலுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி அரசாங்கம் குளிா்காலத்தில் காற்று மாசுபாட்டைச் சமாளிக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்காமல் வாய்ச் சொல் வீரா் போல செயல்படுகிறது. தில்லியின் சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 500 புள்ளிகளைத் தொடும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த எண்ணிக்கையானது 1133-ஐ எட்டியுள்ளது.
ஆம் ஆத்மி அரசு தில்லியை எரிவாயு அறையாக மாற்றியுள்ளது. காற்று மாசு காரணமாக நகர மக்கள் காலை நடைப்பயிற்சிக்கு வெளியே செல்ல முடியாத சூழலும் உள்ளது என்றாா் விஜய் கோயல்.