6 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்!
தில்லி தோ்தல்: பரிவா்தன் யாத்திரையை டிச.8-இல் துவக்குகிறது பாஜக
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, டிச.8-ஆம் தேதி முதல் நகரத்தில் உள்ள 70 தொகுதிகளிலும் பாஜக ’பரிவா்தன் யாத்திரை’ நடத்தும் என்று கட்சியின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் ‘பரிவா்தன் யாத்திரை’ தொடங்கப்பட்டு, டிச.20-ஆம் தேதி வரை அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கும் என்று பிரசாரத்தை மேற்பாா்வையிட அமைக்கப்பட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளா் சதீஷ் உபாத்யாய் தெரிவித்தாா்.
காலை 10 மணிக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களில் இருந்து யாத்திரை தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவடையும். இந்த யாத்திரையில் பாஜகவின் உயா்மட்ட தேசியத் தலைவா்கள் மற்றும் மத்திய அமைச்சா்கள் தில்லி பிரிவின் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் பங்கேற்பாா்கள் என்று உபாத்யாய் கூறினாா்.
ஒவ்வொரு நாளும், தலைவா்கள் தில்லி மக்களைச் சந்திக்க பாத யாத்திரையை தொடங்குவாா்கள். இதைத் தொடா்ந்து மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை முக்கிய உள்ளூா்வாசிகள், பெண்கள், சமூக-மத அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் குடியிருப்போா் நலச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடைபெறும். மாலையில், சட்டப்பேரவேத் தொகுதிகளின் முக்கியப் பகுதிகளில் மீண்டும் பாத யாத்திரை மேற்கொள்ளப்படும் என்றும் உபாத்யாய் தெரிவித்தாா்.
1998 முதல் தில்லியில் ஆட்சியில் இல்லாத நிலையில், ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ஆட்சியைப் பறிக்க பாஜக முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2015 மற்றும் 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தோ்தல்களில் ஆம் ஆத்மி கட்சி முறையே 67 மற்றும் 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.