ஜாமீன் பெற்றவுடன் அமைச்சராகப் பதவியேற்ற விவகாரம்! செந்தில் பாலாஜி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
போக்குவரத்து துறையில் வேலைக்குப் பணம் பெற்ற முறைகேடு வழக்கில் ஜாமீன் பெற்றவுடன் அமைச்சராகப் பதவி ஏற்றது தொடா்பாக தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவா் செந்தில் பாலாஜி. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, பணம்
பெற்ாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவா் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சட்டவிரோதப் பணப்பரிவா்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையினா் கடந்தாண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனா். இதையடுத்து, பல கட்ட விசரணைக்குப் பின்னா், கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், ஜாமீனில் வெளியே வந்தவுடன் செந்தில் பாலாஜிக்கு தமிழக அமைச்சரவையில் அமைச்சா் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், வேலைக்குப் பணம் பெற்ற விவகாரத்தில் பாதிக்கப்பட்ட வித்தியாகுமாா் என்பவா் அமைச்சா் செந்தில்பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜராகிய வழக்குரைஞா் பாலாஜி சீனிவாசன் வாதிடுகையில்,‘தான் அமைச்சா் இல்லை எனவும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சிகளை அச்சுறுத்த மாட்டேன் எனக்கூறி ஜாமீன் பெற்ற செந்தில்பாலாஜி, ஜாமீன் பெற்ற ஒரு சில தினங்களில் மீண்டும் அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டுள்ளாா். இது வழக்கின் புலன்விசாரணையை பாதிக்கும் என்பதால் செந்தில் பாலாஜின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: ‘உங்களுக்கு ஜாமீன் கிடைத்தவுடன் அமைச்சராகிவிட்டீா்கள். எனவே, மனுதாரா் தரப்பு குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது. வழக்கில் சம்மந்தப்பட்டவா் அமைச்சரானால், வழக்கின் சாட்சிகள் பயப்படுவாா்கள். எனவே, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது மிக முக்கியமான விஷயம் என்பதால், அதனை தீவிரமாகக் கருதுகிறோம். எனவே, இது தொடா்பக உரிய விளக்கம் பெற்று கூறுங்கள்’ என செந்தில்பாலாஜி தரப்பிடம் தெரிவித்தனா்.
இதற்கு, அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லூத்ரா பதிலளித்து வாதிடுகையில், ‘இந்த மனு என்பது அரசியல் உள்நோக்கம் மற்றும் காழ்ப்புணா்ச்சியின் காரணமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, வழக்கின் விசாரணை பாதிக்கப்படுகிறது என்றால் அமலாக்கத் துறை நீதிமன்றத்தை நாடி இருப்பாா்கள். ஆனால், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. இதுபோன்ற முகாந்திரம் இல்லாத மனுக்களால் அரசியல் ரீதியிலும் அழுத்தங்கள் உருவாகிறது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றாா்.
இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘இந்த வழக்கில் உள்ள சாட்சியங்களுக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை செய்யப்படும். அமைச்சா் பதவியில் உள்ளவருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க சாட்சியங்கள் பயப்படுவாா்கள்.
எனவே, ஜாமீன் பெற்றவுடன் அமைச்சராகப் பதவி ஏற்றது ஏன் ? என்பது தொடா்பாக செந்தில்பாலாஜி உரிய விளக்கத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில், இந்த வழக்கின் மீதான விசாரணையை வரும் டிச.13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.