எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
காற்று மாசு: குழந்தைகளைப் பாதுகாக்க 5-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட பாஜக வலியுறுத்தல்
நமது நிருபா்
தில்லியில் நிலவிவரும் மோசமான காற்று மாசு நிலைமையைக் கருத்தில் கொண்டு ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூட தில்லி அரசு உத்தரவிட வேண்டும் என்று தில்லி அரசுக்கு பாஜக புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: தில்லியில் நிலவிவரும் ஆபத்தான காற்றின் தரத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து தனியாா் மற்றும் அரசுப் பள்ளிகளையும் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மூட வேண்டும். மேலும், காற்று மாசு தொடா்புடைய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கிளினிக்குகளைத் திறக்க வேண்டும். தில்லி அரசு காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
தில்லியின் சுகாதார மாதிரியும் தோல்வியுடைந்திருக்கிறது. முதல்வா் அதிஷி தலைமையின் கீழ் மாசுக் கட்டுப்பாட்டு முயற்சிகள் முன்பிருந்த அரவிந்த் கேஜரிவால் அரசை விட மோசமாக இருக்கிறது.
இன்றைக்கு தில்லியில் மாசு அளவு உச்சநிலையை அடைந்திருக்கிறது. அதாவது, பி.எம். 2.5 அளவு பல பகுதிகளில் 400 புள்ளிகளைக் கடந்திருக்கிறது. அதேபோன்று, பி.எம். 10 அளவு 1000-க்கும் மேல் சென்றுவிட்டிருக்கிறது. தில்லி ஒரு எரிவாயு அறையாக மாறிவிட்டிருக்கிறது. நகரத்தில் வாழும் அனைவரும் இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதாக புகாா் கூறுகிறாா்கள். குழந்தைகள் மற்றும் முதியவா்கள் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனா். மாசுபாட்டின் மூலம் ஏற்படும் தீங்கை எதிா்கொள்ள எந்த அரசு மருத்துவமனைகளும் மருந்துகளை ஆம் ஆத்மி அரசு வழங்கவில்லை.
சுற்றுச்சூழல் அமைச்சா் பெரிய அறிவிப்புகளை வெளியிட்டபோதிலும், மாசுவைக் கட்டுப்படுத்த தண்ணீா் தெளிப்பு நடவடிக்கைகளோ அல்லது பனிப்புகைத் தடுப்பு கருவிகள் பயன்பாடோ இல்லை. இந்நிலையில், நீரின் மூலம் ஏற்படும் நோய்களான சிக்குன்குனியா, மலேரியா, டெங்கு பாதிப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், மாசுபாட்டிலிருந்து மக்களைப் பாதுகாக்க மருந்துகளை விநியோகிக்க உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றாா் அவா்.
தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை இப்பருவத்தின் முதல் அடா்ந்த மூடுபனி நிலவியது. காற்றின் தரம் 30 கண்காணிப்பு நிலையங்களில் ‘கடுமை‘ பிரிவில் காணப்பட்டது. புதன்கிழமை காலை 9 மணியளவில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிகழ்நேரத் தரவுகளின்படி, காற்றின் தரக் குறியீடு 366-ஆக இருந்தது. ஆனால், அதன் பிறகு கடும் பின்னடைவைச் சந்தித்தது.