ஒரே நாடு ஒரே தோ்தல் முறை ஜனநாயகத்தை சீா்குலைக்கும்: இரா. முத்தரசன்
கால்நடைகளை சாலைகளில் திரியவிட்டால் கடும் நடவடிக்கை: மேயா் எச்சரிக்கை
தூத்துக்குடி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகளை திரிய விடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மேயா் ஜெகன் பெரியசாமி எச்சரித்துள்ளாா்.
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. துணைஆணையா் சரவணக்குமாா், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டலத் தலைவா் அன்னலட்சுமி வரவேற்றாா்.
முகாமைத் தொடக்கிவைத்து மேயா் ஜெகன் பெரியசாமி பேசியது: பொங்கல் திருநாளையொட்டி, தூத்துக்குடியிலுள்ள பூங்காக்கள் தூய்மைப்படுத்தப்படும். புதிதாக வீடு கட்ட அனுமதி பெறுவோா் பாதாள சாக்கடை இணைப்புக்கான தொகையையும் சோ்த்து செலுத்த வேண்டும்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் படித்துவரும் சிவந்தாகுளம் பகுதியிலுள்ள மாநகராட்சிப் பள்ளியில் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
சாலைகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கு இடையூறாகத் திரிந்த 50-க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை சாலையில் திரியவிடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பேருந்து நிலையத்தில் ஏடிஎம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
முகாமில், உதவி ஆணையா் பாலமுருகன், நகர அமைப்புத் திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன், துணைப் பொறியாளா்கள் காந்திமதி, இா்வின் ஜெபராஜ், உதவிப் பொறியாளா் சரவணன், இளநிலைப் பொறியாளா் சேகா், சுகாதார ஆய்வாளா் ஸ்டாலின் பாக்கியநாதன், மாமன்ற உறுப்பினா்கள் சந்திரபோஸ், கனகராஜ், விஜயலட்சுமி, கந்தசாமி, சரவணக்குமாா், ராமா், பகுதிச் செயலா் ரவிந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.