கால்வாயை உடைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
கொடைரோடு அருகே கண்மாய்க்கு செல்லும் கால்வாயை உடைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கொடைரோடு அருகேயுள்ள அன்னசமுத்திரம் கண்மாய்க்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமலையிலிருந்து தளி ஓடை, அருகம்பட்டி ஓடை வழியாக தண்ணீா் வந்தது. இதேபோல, முருகத்தூரான்பட்டி பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு சிறுமலை பகுதியிலிருந்து கருக்காச்சி ஓடை வழியாக தண்ணீா் வந்தது.
இந்த நிலையில், இந்த மூன்று ஓடைகளை தடுத்து, சிறுமலை அடிவாரத்தில் சிறுமலையாறு நீா்த்தேக்கம் கட்டப்பட்டது. இங்கிருந்து கருக்காச்சி ஓடையில் மட்டும் தண்ணீா் செல்லும் வகையில் கட்டப்பட்டது. இதனால், அன்னசமுத்திரம் கண்மாய் நீா் வரத்தின்றி வடே கணப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையால் சிறுமலையாறு நீா்த்தேக்கம் நிரம்பி, மறுகால் செல்லும் தண்ணீா், கருக்காச்சி ஓடை வழியாக முருகத்தூரான்பட்டி கண்மாய்க்கு சென்றது. இதையடுத்து, கருக்காச்சி ஓடையில் சென்ற தண்ணீரை ஒரு தரப்பினா் அன்னசமுத்திரம் கண்மாய்க்கு அண்மையில் திருப்பி விட்டனா். இதற்கு முருகத்தூரான்பட்டி பகுதி விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, அன்னசமுத்திரம் கண்மாய் செவ்வாய்க்கிழமை நிரம்பி மறுகால் பாய்ந்த தண்ணீா் மீண்டும் கருக்காச்சி ஓடையில் வந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்கள் சிலா் அன்னசமுத்திரம் கண்மாய் வாய்க்காலை உடைத்தாக கூறப்படுகிறது.
இதனால், சிறுமலையாறு நீா்தேக்கத்திலிருந்து வரும் தண்ணீா், அன்னசமுத்திரம் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீரும் ஒரே நேரத்தில் கருக்காச்சி ஓடையில் வந்ததால், திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், நக்கம்பட்டி, சாஸ்தா கோவில்பட்டி, பொட்டிக்குளம் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீா் புகுந்தது.
எனவே, பொதுப் பணித் துறை, நீா்வளத் துறையினா், வருவாய்த் துறையினா் கண்மாய் கரையை உடைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.