பந்துவீச்சில் அசத்திய மார்கோ யான்சென், 5 பேர் டக் அவுட்; 42 ரன்களில் சுருண்ட இலங...
`காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா இல்லையா?' - சர்ச்சையும் உண்மையும் | முழு அலசல்
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்திருக்கும் சர்ச்சைக்குரிய பதிலால், `காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? இல்லையா? தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் செல்லுமா? செல்லாதா? மத்திய அரசால்தான் இப்படி அறிவிக்க முடியுமா? என அடுத்தடுத்த பல்வேறு கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் வித்திட்டிருக்கிறது. இது தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பதோடு, தமிழக மக்களையும் டெல்டா விவசாயிகளையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன.
காங்கிரஸ் எம்.பி எழுப்பிய கேள்வி... மத்திய அமைச்சர் அளித்த பதிலால் சர்ச்சை!
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி, ஆர்.சுதா, நாடாளுமன்றத்தில் மூன்று கேள்விகளை எழுப்பியிருந்தார். குறிப்பாக,
1). கடந்த ஐந்து ஆண்டுகளில் மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் எத்தனை ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தரப்பட்டிருக்கிறது?
2). கடந்த ஐந்து ஆண்டுகளில், எத்தனை தடையில்லா சான்றுகள்(NOC) அளிக்கப்பட்டன? எந்தெந்த இடங்களுக்கு, எந்தெந்த நிறுவனங்களால், எத்தனை விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன?
3). தமிழ்நாடு அரசு டெல்டா மாவட்டங்களை சிறப்பு விவசாய மண்டலமாக அறிவித்திருப்பதால், அவற்றை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து, எண்ணெய் - எரிவாயுத் திட்டங்களைத் தடை செய்ய ஒன்றிய அரசுக்கு கொள்கை (Policy) ஏதேனும் இருக்கிறதா? என்று மூன்று கேள்விகளை தொடுத்திருந்தார்.
இந்தக் கேள்விகளுக்கு எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், மூன்றாவது கேள்விக்கு அளித்த பதில்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, பாதுகாக்கப்பட்ட மண்டலம் தொடர்பாக எழுப்பப்பட்ட அந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், ``மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமானது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 - இன் படி, மாநில அரசிடமிருந்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் சில பகுதிகளை சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலம் அல்லது பகுதி (Eco Sensitive Zone - (ESZ) / Eco Sensitive Area (ESA)' என அறிவிக்கிறது. அப்படி தமிழ்நாடு அரசிடமிருந்து இந்த அமைச்சகத்திற்கு எந்தக் கோரிக்கை முன்மொழிவும் வரவில்லை. மேலும், எண்ணெய் வயல், எரிவாயு துரப்பணச் சட்ட விதிகளில் இப்படி அறிவிக்க எந்த விதிமுறையும் இல்லை!" எனத் தெரிவித்தார்.
சர்ச்சை பதில்... மோதிக்கொண்ட தி.மு.க Vs அ.தி.மு.க!
இந்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் சர்ச்சைக்குரிய பதில் தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. குறிப்பாக, `கடந்த 2020- ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கேள்விக்குறியாகிவிட்டது. தமிழ்நாடு அரசிடம் இருந்து அதுகுறித்தான எந்த முன்மொழிவும் வரவில்லை என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது நாங்கள் தான் என மார்தட்டிக் கொண்ட பழனிச்சாமி பச்சைத்'துரோகம் செய்துவிட்டார்' என தி.மு.க ஐ.டி-விங்கைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். குறிப்பாக, தி.மு.க செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, ``டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது எங்கள் சாதனை என மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லி வரும் எடப்பாடி பழனிசாமி இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? ஒன்றிய அரசு அப்படியொரு திட்டம் எங்களுக்கு வரவேயில்லை என சொல்லியிருக்கின்றனர்! இப்படியெல்லாமா தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றுவது?" எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அ.தி.மு.க ஐ.டி விங் நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார், ``தி.மு.க ஐடி விங்கைச் சேர்ந்தவர்கள் இது போன்ற மக்கு வேலையை செய்வதை விடுத்து உருப்படியாக ஏதாவது யோசிக்கவும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம். இதில் மாநில அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது அதில் மத்திய அரசு தலையிட முடியாது. மத்திய அரசின் ESZ/ESA என்பது வேளாண் மண்டலத்துகுப் பொருந்தாது. இது காப்புக்காடுகள், சரணாலயங்கள், தேசிய பூங்கா, புலிகள் காப்பகம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கானது மட்டுமே. தமிழக சட்டசபையில் ஏற்றப்பட்ட சட்டத்திற்கு எத்தனை முறை கேட்டாலும் "இல்லை" என்று தான் பதில் வரும். ஏனென்றால் இது மாநில உரிமை. எடப்பாடியார் கொண்டு வந்த வேளாண் மண்டலம் அமலில் உள்ளதால் தான் இதுவரை புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்படவில்லை!' என காட்டமாக பதிலளித்தார்.
அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ``விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, சட்ட வல்லுனர்கள் குழு ஆலோசனைக்கு பின்பே மாநில அரசின் முழு அதிகாரத்தை பயன்படுத்தி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டாவை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. குறிப்பாக, காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பதற்காக கடந்த 10.02.2020 அன்று அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரை கடிதத்துடன் நான் டெல்லி சென்று, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் அந்தக் கடிதத்தை கொடுத்தேன். அப்போது அதை வாங்கிக்கொண்டு பதிலளித்த பிரகாஷ் ஜவகடேர், `இந்திய அரசியலமைப்புச் சட்ட அட்டவணை 7-ன் படி, வேளாண்மைத் துறை மாநில பட்டியலில் இருக்கிறது. எனவே மாநில அரசே சட்டம் இயற்றலாம் என்று கருத்து தெரிவித்தார்.
அதன் பிறகுதான் 20.02.2020 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தச் சட்டத்தை தனித்தீர்மானமாக கொண்டுவந்து நிறைவேற்றினார். பிறகு அந்த மசோதா, மறுநாள் 21.02.2020 அன்று தமிழ்நாட்டின் அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார். அது அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதுதான் வரலாற்று உண்மை. அதேசமயம், டெல்டா விவசாயிகளின் உரிமையைப் பறித்து, பாலைவனமாக்க முயற்சித்தது தி.மு.க அரசு. அதனை தடுத்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு!" என அரசாணை நகல், கடிதங்களுடன் ஆதாரப்பூர்வமாக பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் தி.மு.க எம்.பி. கனிமொழி கருணாநிதி, ``தமிழ்நாடு அரசு அறிவித்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை 2021-ல் ஏற்றுக்கொண்ட பா.ஜ.க அரசு, தற்போது அப்படி ஒரு முன்மொழிவை தமிழ்நாடு வழங்கவில்லை எனப் பேசுவது, ஒரு அரசாங்கத்தின் இருவேறு குரல்களாகத் தான் பார்க்க முடிகிறது. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? யாருக்காக இந்த பிறழ்ச்சி? அனுப்பவில்லை என்கிறது பா.ஜ.க, அனுப்பிவிட்டோம் என்கிறது அதிமுக! இதில் யார் சொல்வது உண்மை?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
எதுதான் உண்மை?! - விளக்கம் அளித்த மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு!
இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன் விரிவான அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், `` விரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து கேட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கீர்த்தி வர்த்தன் சிங் அளித்துள்ள பதில், ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசின் மேலாதிக்க உளநிலையையும், மாநில சட்டங்களை மதிக்காத ஒன்றிய அரசின் போக்கையும் அளிக்கப்பட்ட பதில் காட்டுகிறது.
காவிரிப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்திற்கான முன்மொழிவு ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு தமிழ்நாடு அரசு அனுப்பவில்லை என்றும் பொருள் கொள்ளும் வகையில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பதில் இருந்தது. இதனால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதே இல்லாமல் போய்விட்டது என்று ஊடகங்கள் செய்திகளைப் பதிவு செய்தன. இதனால், காவிரிப்படுகை மற்றும் தமிழ்நாடு முழுவதும் ஒரு பதற்றம் ஏற்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு உரிய பதிலை அளிக்காமல், சுற்றுச்சூழல் நுண்உணர்வு மண்டலம் குறித்த பதில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பொறுப்பின்மை மற்றும் கவனமின்மையைக் காட்டுகிறது.
காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என ஏற்கப்படவில்லையோ என்ற கவலை மக்களுக்கு தேவை இல்லை. சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலம் என்பது வேறு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது வேறு. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது முழுமையாக மாநில அரசின் அதிகாரம் சார்ந்தது. இந்திய அரசியல் சட்டம் 7 - வது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் 14-வது அதிகாரம் விவசாயம் பற்றியும், 18 மற்றும் 48-வது அதிகாரம் நிலம் பற்றியும் உள்ளது. இவ்வாறு விவசாயம் மற்றும் நிலம் மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருப்பதால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு மாநில அரசின் அதிகாரமாகும். பாதுகாக்கப்பட்ட மண்டலத்தை விரிவு செய்யவும், தடை செய்யப்பட்ட தொழில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உரிய பரிந்துரைகளைச் செய்ய பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
கடந்த 20.02.2020- அன்று பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்கிவிட்டார். ஆளுநரின் ஒப்புதல் என்பது ஒன்றிய அரசின் ஒப்புதல் ஆகும். ஒன்றிய அரசின் சட்டங்களுடன் முரண்பாடு ஏற்படாத நிலையில், எந்த சட்டத்திற்கும் குடியரசுச் தலைவரிடம் ஒப்புதல் பெறத் தேவையில்லை. ஆகவே பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலச் சட்டம் எந்த கேள்விக்கும் அப்பாற்பட்டது. தமிழ்நாடு பெற்றிருக்கும் எந்த உரிமையையும், பாதுகாப்பையும், தீர்த்துக்கட்டும் போக்கு ஒன்றிய அரசிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு மிக கவனமாக செயல்பட வேண்டும்!" எனத் தெரிவித்திருக்கிறார்.
சந்தேகம் கிளப்பும் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு!
இந்த நிலையில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், ``மத்திய அரசு, நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தினரில் எண்ணெய் வயல் ஒழுங்காற்று மேம்பாட்டு சட்டம் - 2024 என்கிற பெயரில் ஒரு புதிய சட்ட முன்வடிவை கொண்டு வர உள்ளது. இச்சட்டம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. விவசாயத்தை அழிக்கும் உள் நோக்கம் கொண்டது. இச்சட்டம் கொண்டு வரப்பட்டால் உணவு உற்பத்தி அடியோடு அழியும். வேளாண் விளைநிலங்கள் கார்ப்பரேட்டுகள் தன் விருப்பத்திற்கு அபகரிப்பார்கள். இச்சட்டம் மூலம் இயற்கை எரிவாயு, எண்ணெய் உள்ளிட்ட கனிம வளங்கள் தனியாருக்கு தாராளமாக்குவதற்கு கொண்டுவரப்பட்டுகிறது.
மிக முக்கியமாக, இச்சட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் காலாவதி ஆகிவிடும். மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வேளாண் விளைநிலங்களையும், நீர்நிலைகளையும்பாதுகாக்க முடியாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். எனவே மாநில அரசுகளுக்கு இருக்கும் அதிகாரங்களை குறைத்து மக்களை அகதிகளாக்கும் நோக்கோடு மத்திய அரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான வகையில் இச்சட்டத்தை கொண்டு வருகிறது. ஏற்கனவே மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலம் என்கிற பரிந்துரைகள் வரப்படவில்லை என்று உள்நோக்கத்தோடு கூறியிருக்கிறார். இது மாதிரியான செயல்பாடுகள் இச்சட்டமுன்வடிவிற்கு முன்னோட்டம் கொண்டவையாக அமைந்துள்ளதாக தெரிகிறது. எனவே உடனடியாக தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்!" என கோரிக்கை வைத்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...