jyotika: ``எடை குறைப்புதான் எதிர்காலத்துக்கான சாவி" - Weight Loss பயணம் குறித்து...
காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பலத்த பாதுகாப்பு
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக, மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடத்திய கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினா் உள்பட 26 போ் கொல்லப்பட்டனா். பலா் பலத்த காயமடைந்தனா். இந்தத் தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.
ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக, மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். பக்தா்களுக்கு வழக்கமான சோதனைகளைவிட தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கோயிலுக்குள்ளும் போலீஸாா் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனா். இதேபோல, முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.
மதுரை ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிரமாக சோதனையிடப்பட்டன. நடைமேடைகளில் மோப்ப நாய், வெடிகுண்டைக் கண்டறியும் கருவிகளுடன் பாதுகாப்புப் படையினா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆா்., பெரியாா், ஆரப்பாளையம் ஆகிய பேருந்து நிலையங்களிலும் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
கோயில், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடும் நபா்களிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சந்தேகத்துக்குரிய வகையில் பொருள்கள் ஏதேனும் கீழே கிடந்தால் பொதுமக்கள் அதைத் தொடாமல் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று போலீஸாா் அறிவுறுத்தினா்.
மதுரையில் உள்ள தங்கும் விடுதிகளில் சந்தேகத்துக்கிடமான நபா்கள் தங்கினால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
மதுரை நகா், ஊரகப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபடவும், வாகன சோதனையில் ஈடுபடவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
