காஸாவில் அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 23 பேர் பலி!
காஸா நகரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டதாக அந்நகரத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஸாவின் ஷிஜாயா பகுதியிலுள்ள 4 மாடி குடியிருப்புக் கட்டடத்தின் மீது இன்று (ஏப்.9) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்தக் கட்டடம் முழுவதும் சரிந்ததாகவும், அதில் 8 பெண்கள் மற்றும் 8 குழந்தைகள் உள்பட 23 பேர் கொல்லப்பட்டதாக அல்-அஹ்லி மருத்துவமனை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், மீட்புப் படையினர் அந்தக் கட்டட இடிபாடுகளினுள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ள நிலையில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ஷிஜாயா நகரத்தில் பதுங்கியிருந்த ஹமாஸ் படையைச் சேர்ந்த மூத்த கிளர்ச்சியாளரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி கிளர்ச்சிப்படையினரை குற்றம்சாட்டியுள்ளது. இருப்பினும், அவர்கள் குறிவைத்ததாக சொன்ன ஹமாஸ் தலைவர் யாரென்று தெரிவிக்கப்படவில்லை.
இதனிடையே, ஹமாஸ் தங்களிடமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க முன்வந்தபோதிலும் இஸ்ரேல் ராணுவம் காஸாவின் ஷிஜாயா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பாலஸ்தீனப் பகுதிகளை பெருமளவில் ஆக்கிரமித்து புதியப் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள மக்கள் வெளியேற வேண்டுமென அங்கு செல்லும் உணவுகள் உள்ளிட்ட மனிதாபிமான பொருள்களை இஸ்ரேல் ராணுவம் முடக்கியுள்ளது.
முன்னதாக, 8 வாரங்களாக கடைபிடிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்து இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலை கடந்த மார்ச் மாதம் தொடர்ந்துள்ளது. இதன் பின்னர் முதல்முறையாக இந்த வாரம் ஹமாஸ் தனது ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேலின் தெற்குப் பகுதிகளை நோக்கி நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:இந்தோனேசியாவில் பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக அடைக்கலம்! அதிபர் அறிவிப்பு!