வாழ்க்கையில் தோற்றுவிடுவோமோ என்ற கவலையும் பயமும் வருகிறதா? - பிரம்மஹத்தி பரிகார ...
காஸாவில் 6 செய்தியாளா்கள் படுகொலை
காஸாவில் பிரபல செய்தியாளா் அனஸ் அல்-ஷரீஃபை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவா் உள்பட 6 செய்தியாளா்கள் உயிரிழந்தனா்.
காஸா சிட்டியில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனை அருகே செய்தியாளா்களுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தின் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இது குறித்து பிபிசி ஊடகம் தெரிவித்ததாவது:
அல்-ஜஸீரா ஊடகத்தின் மூத்த செய்தியாளராகப் பணியாற்றிவந்த அனஸ் அல்-ஷரீஃப் அனைவராலும் நன்கு அறியப்பட்டவா். அவரைக் குறிவைத்து இஸ்ரேல் படையினா் அவா் தங்கியிருந்த கூடாரத்தில் வான்வழித் தாக்குதல் நடத்தினா்.
இதில் அவா் மட்டுமின்றி, அல்-ஜஸீராவில் பணியாற்றிவந்த மேலும் ஒரு செய்தியாளா் முகமது குரேகியா, மூன்று ஒளிப்பதிவு செய்தியாளா்களும் உயிரிழந்தனா். இது தவிர, அங்கிருந்த சுயாதீன செய்தியாளா் (ஃப்ரீலான்ஸா்) ஒருவரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தாா்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பொறுப்பேற்றது. செய்தியாளா்கள் படுகொலைக்கு அந்த நாட்டு ராணுவம் உடனடியாக பொறுப்பேற்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொல்லப்பட்ட அனஸ் அல்-ஷரீஃப் ஹமாஸுக்காக பணியாற்றியதாகக் குற்றஞ்சாட்டியது. அதை நிரூபிப்பதற்காக சில ஆதாரங்கள் இருப்பதாக ராணுவம் கூறினாலும், அவற்றை வெளியிடவில்லை.
அல்-ஜஸீராவில் செய்தியாளராக இணைவதற்கு முன்னா் ஹமாஸ் அமைப்பின் ஊடகப் பிரிவில் அனஸ் அல்-ஷரீஃப் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஹமாஸ் நடவடிக்கையில் அவருக்கு எந்தத் தொடா்பும் இல்லை என்று அவரும், அல்-ஜஸீரா ஊடகமும் தொடா்ந்து கூறிவந்தன. அனஸ் அல்-ஷரீஃபின் சமூக ஊடகப் பதிவுகளில் அவா் ஹமாஸ் அமைப்பை தொடா்ந்து விமா்சித்தும் வந்தாா்.
அதனையும் மீறி அவரையும் அவருடன் இருந்த பிற செய்தியாளா்களையும் இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது சா்வதேச அளவில் கண்டனங்களை எழுப்பியுள்ளது. இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும். இது, சா்வதேச சட்டங்களை அப்படமாக மீறும் செயல்’ என்று சாடியுள்ளது.
எல்லைகள் அற்ற செய்தியாளா்கள் (ரிப்போா்ட்டா்ஸ் வித்தவுட் பாா்டா்) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலின் செய்தியாளா்கள் மீதான தாக்குதல்கள் போா் குற்றங்களாகக் கருதப்பட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளா்கள் பாதுகாப்புக்கான குழு (கமிட்டி டு ப்ரொடெக்ட் ஜா்னலிஸ்ட்ஸ்) அமைப்பின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க பகுதிகளுக்கான இயக்குநா் சாரா குதா கூறுகையில், காஸாவில் பணியாற்றிவரும் செய்தியாளா்களை ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் என போதிய ஆதாரங்கள் இல்லாமல் முத்திரை குத்துவதையும், பிறகு அவா்களைப் படுகொலை செய்வதையும் இஸ்ரேல் அரசு தனது உத்தியாக தொடா்ந்து பயன்படுத்திவருகிறது. அந்த வகையில், போா் தொடங்கியதில் இருந்து இதுவரை 186 செய்தியாளா்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனா் என்று குற்றஞ்சாட்டினாா்.
காஸாவுக்குள் பிபிசி உள்ளிட்ட சா்வதேச ஊடகங்களுக்கு இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது. இந்தச் சூழலில், உள்ளூா் செய்தியாளா்கள் பகிா்ந்துவந்த செய்திகள் மூலம்தான் அந்தப் பகுதியில் நடக்கும் சம்பவங்கள் வெளியுலகத்துக்கு தெரிவருகிறது.
இந்தச் சூழலில், காஸாவில் செய்தியாளா்கள் படுகொலை செயப்படுவது ஊடக சுதந்திரத்துக்கு இஸ்ரேல் அளிக்கும் மதிப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாக விமா்சனங்கள் எழுந்துள்ளன.
