காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 50-க்கும் மேற்பட்டோர் பலி!
காஸா மீது நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 55 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை விடுவித்து, காஸாவை விட்டு வெளியேறும் வரை போரை மேலும் தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்கும் மேலாக காஸாவுக்குச் செல்லும் உணவு, எரிபொருள், உதவிகள் ஆகியவற்றை இஸ்ரேல் தடுத்தி நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் நேற்று நள்ளிரவில் காஸாவில் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாகக் கூறப்படுகிறது. இதில், பலரும் காயமடைந்துள்ளனர்.
ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக காஸாவில் புதிய பாதுகாப்பு பகுதிகளை உருவாக்கி, தெற்கு நகரமான ரஃபாவை முழுவதும் பாலஸ்தீனத்திடமிருந்து பிரிக்கப் போவதாகவும் இதன்மூலம் மட்டுமே பணயக் கைதிகளை அவர்கள் விடுவிப்பார்கள் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
முன்னதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில்,”இஸ்ரேல் ராணுவம் காஸாவில் தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது. அங்குள்ள முக்கிய பகுதிகளில் இருந்து பயங்கரவாதக் கட்டமைப்புகளை அகற்றி அந்தப் பகுதிகளைக் கைப்பற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பின்னா் அவை இஸ்ரேல் பாதுகாப்புப் பகுதிகளாக இணைத்துக்கொள்ளப்படும்.
காஸாவில் போா் நிறுத்தம் முறிந்த பின்னர் சண்டை நடைபெற்றுவரும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வேண்டும்.
அதுமட்டுமின்றி, பொதுமக்கள் இணைந்து உடனடியாக ஹமாஸ் படையினரை அதிகாரத்தில் இருந்து அகற்றி அவா்களால் கடத்திவரப்பட்ட பணயக் கைதிகள் அனைவரையும் இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும். இது மட்டுமே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
பாலஸ்தீன பணயக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்தால் தங்களிடம் உள்ள 59 பணயக் கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் முன்பு கூறியிருந்தது. அவர்களில் 24 பேர் மட்டுமே தற்போது உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், ஹமாஸ் தங்களின் ஆயுதங்களை ஒப்படைத்து, காஸாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை அவர்கள் நிராகரித்தனர்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 50,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.