அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!
காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.
காஸாவில் கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற மனிதாபிமான அறக்கட்டளையிடம் உதவிகளைப் பெற முயன்று சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், பெரும்பாலனோர் அந்த அறக்கட்டளைகளின் தளங்களுக்கு அருகில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காஸா பகுதியினுள் நிவாரணப் பொருள்கள் விநியோகத்தை, இஸ்ரேல் 2 மாதங்களுக்கும் மேலாக நிறுத்தியதைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ தனியார் முயற்சியான காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) கடந்த மே 26 ஆம் தேதி தனது நிவாரண நடவடிக்கைகளைத் தொடங்கியது.
இந்நிலையில், அந்த நடவடிக்கைகள் தொடங்கியது முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை, அந்த அறக்கட்டளையின் தளங்களுக்கு அருகில் 615 பேர் கொல்லப்பட்டது பதிவாகியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் உரிமைகள் அலுவலக செய்தித் தொடர்பாளர் ரவினா ஷம்தாசனி கூறியுள்ளார்.
இத்துடன், ஐ.நா. உள்ளிட்ட அறக்கட்டளைகளின் நிவாரண வாகனங்கள் செல்லும் பாதைகளில் மேலும் 183 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம், இந்தாண்டு (2025) நிவாரணப் பொருள்களைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் பெரும்பாலானோர் துப்பாக்கிச் சூட்டில் பலியானதும் தெரியவந்துள்ளன.
காஸாவில் ஐ.நா. சபை மேற்கொண்ட நிவாரணப் பொருள்கள் விநியோகத்தை ஓரங்கட்டிய ஜி.எச்.எஃப். அறக்கட்டளையின் தளங்களில் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நாள்தோறும் பதிவானதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், கடந்த ஜூலை 10 ஆம் தேதி வரை சுமார் 6.9 கோடி உணவுப் பொட்டலங்களை காஸாவில் விநியோகித்துள்ளதாகக் கூறும் ஜி.எச்.எஃப். அறக்கட்டளை, அவர்களது தளங்களில் எந்தவொரு துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, நிவாரணப் பொருள்கள் வழங்கப்படும் தளங்களுக்கு அருகில் மக்கள் மீது ஹமாஸ் கிளர்ச்சிப்படைதான் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The United Nations said today (July 11) that about 800 people have been killed in Gaza since the end of May while trying to access relief aid, including food.
இதையும் படிக்க: மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!