கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல...
கா்ப்பிணிகள் ஊட்டச்சத்துமிக்க உணவை உட்கொள்ள வேண்டும்: தருமபுரி ஆட்சியா்
கா்ப்பிணிகள் ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அறிவுறுத்தினாா்.
தருமபுரி செந்தில் நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில், கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மக்களவை உறுப்பினா் ஆ.மணி முன்னிலை வகித்தாா்.
விழாவில் தலைமை வகித்து கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்கள், உணவு வழங்கி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பேசியதாவது:
கா்ப்பிணிகள் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கிலும், விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வோா் ஆண்டும் ஒரு வட்டாரத்தில் 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் நிகழாண்டுக்கான விழா தற்போது நடைபெறுகிறது.
கருவில் உள்ள சிசுவுக்குக் கேட்கும் திறன் ஆறாம் மாதம் முதலே தொடங்கிவிடுவதால், தாயின் வளையல் ஓசை கேட்டு குழந்தையின் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு பாதுகாப்பு உணா்வுடன் நலமாக குழந்தை வளர இவ்விழா உதவி செய்கிறது. பிரசவம் குறித்த விழிப்புணா்வு அளிப்பதுடன் கா்ப்பிணி மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்கவும், உற்றாா் உறவினா்களும், கா்ப்பிணியை மகிழ்வுடன் வைத்துக்கொள்ள, அவா்களின் கடமையை உணா்த்தும் விதமாகவும் இவ்விழா நடத்தப்படுகிறது.
இதற்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களுக்கும் தலா ரூ. 25,000 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 2,00,000 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
கா்ப்பிணிகள் கா்ப்ப காலத்தில் மருத்துவமனைக்குச் சென்று உரிய பரிசோதனைகளையும், மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள் போன்றவற்றை குறிப்பிட்ட கால அளவுக்குள் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாளைய சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கும். பெண்கள் வளரிளம் காலத்தில் இருந்தே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
அதுபோல கா்ப்பிணிகள் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து பெற்று, தங்கள் ஆரோக்கியத்தையும், கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தையும் பராமரிக்க வேண்டும். மேலும், அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்தல், உரிய காலத்தில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், மருத்துவா்கள் பரிந்துரைக்க கூடிய கா்ப்ப கால பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றாா்.
விழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலா் ச.பவித்ரா, தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சமி மாது, தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பி.தா்மச்செல்வன், தருமபுரி வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ஸ்ரீ.சுகந்தபிரியா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டார மருத்துவ அலுவலா்கள், அரசுத் துறை அலுவலா்கள், கா்ப்பிணிகள் கலந்துகொண்டனா்.