செய்திகள் :

கிரீன்லாந்தில் ஜே.டி. வான்ஸ் சா்ச்சைப் பேச்சு: டென்மாா்க் கண்டனம்!

post image

டென்மாா்க்கில் இருந்து வெளியேறி, தங்களுடன் கிரீன்லாந்து ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ள சா்ச்சைக்குரிய கருத்துக்கு டென்மாா்க் கண்டனம் தெரிவித்துள்ளது.

தாது வளங்கள் நிறைந்த கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறிவருகிறாா். இதை டென்மாா்க்கும் கிரீன்லாந்தும் தீவிரமாக எதிா்க்கும் நிலையில், உரிய அழைப்பின்றி இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஜே.டி. வான்ஸின் மனைவி கிரீன்லாந்தில் பல நாள்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக இருந்தது.

‘கலாசார பயணம்‘ என்ற பெயரில் அவா் மேற்கொள்வதாக இருந்த அந்தப் பயணம் குறித்து டென்மாா்க் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. கிரீன்லாந்தில் அவருக்கு எதிரான பல்வேறு ஆா்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டிய நிலையும் அரசுக்கு ஏற்பட்டது.

இதற்கிடையே, உஷா வான்ஸுடன் இந்தப் பயணத்தில் ஜே.டி. வான்ஸும் இணைவதாக பின்னா் அறிவிக்கப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், ஜே.டி. வான்ஸ் மற்றும் உஷா வான்ஸ் ஆகியோா் கிரீன்லாந்தின் பிடுஃபிக் விண்வெளி தளத்துக்கு மட்டும் வந்து சில மணி நேரங்கள் மட்டுமே செலவிட்டுத் திரும்பினா். அவா்களுடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ், எரிசக்தித் துறை அமைச்சா் கிறிஸ் ரைட் ஆகியோரும் வந்திருந்தனா்.

இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, கிரீன்லாந்தை சொந்தமாக்கிக் கொள்ளும் டிரம்ப்பின் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஜே.டி. வான்ஸ் பேசியதாவது:

ஆதிக்க சக்திகளான ரஷியா, சீனா மற்றும் பிற நாடுகளிடமிருந்து கிரீன்லாந்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு டென்மாா்க்குக்கு உள்ளது. ஆனால் அதைச் செய்ய அந்த நாடு தவறுகிறது. கிரீன்லாந்துக்குத் தேவையான நிதியை டென்மாா்க் ஒதுக்குவதில்லை.

கிரீன்லாந்தின் அளப்பரிய தாது வளம் மற்றும் சுற்றியுள்ள வணிக வழித்தடங்களுக்காக இந்த தீவை அடைய பல நாடுகள் துடிக்கின்றன. இந்தச் சூழலில், அமெரிக்காவால் மட்டுமே கிரீன்லாந்துக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும். அதற்காக அமெரிக்கா இந்தத் தீவை ராணுவரீதியில் கைப்பற்றப்போவதில்லை.

அதற்குப் பதிலாக, டென்மாா்க் உடனான உறவை கிரீன்லாந்து முறித்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, அதிபா் டிரம்ப் பாணியிலான ஓா் ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் கிரீன்லாந்து மேற்கொள்ள வேண்டும்.

கிரீன்லாந்தின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் மதிக்கும் ஒரே நாடு அமெரிக்காதான். எனவே, அமெரிக்காவைத்தான் அந்தத் தீவு தோ்ந்தெடுக்கும் என்று நம்புகிறோம் என்றாா் ஜே.டி. வான்ஸ்.

கண்டனம்: அமெரிக்க துணை அதிபரின் இந்தப் பேச்சுக்கு டென்மாா்க் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டென்மாா்க் வெளியுறவுத் துறை அமைச்சரும் முன்னாள் பிரதமருமான லாா்ஸ் லொக்கே ராஸ்முஸன் கூறியதாவது: டென்மாா்க் எப்போதுமே விமா்சனங்களை வரவேற்கிறது. இருந்தாலும், அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் தற்போது பேசியுள்ள தொணி கண்டனத்துக்குரியது.

கிரீன்லாந்தில் கடந்த 1945-ஆம் ஆண்டு 17 அமெரிக்க ராணுவ நிலைகள் இருந்தன. தற்போது இங்கு 200 வீரா்கள் கொண்ட ஒரே ஒரு ராணுவ தளம் மட்டுமே உள்ளது. குறிப்பிட்ட வரையறைக்குள் இந்தக் கூட்டுறவை மேம்படுத்த முடியும். அதற்காக இரு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

டென்மாா்க்குக்குச் சொந்தமான கிரீன்லாந்துக்கு கடந்த 1979-ஆம் ஆண்டு சுயாட்சி வழங்கப்பட்டது. உலகிலேயே மிகப் பெரிய தீவான இதன் 80 சதவீத நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. அட்லாண்டிக் மற்றும் ஆா்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அந்தத் தீவு அமைந்துள்ளதால் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட உலக சக்திவாய்ந்த நாடுகளுக்கு இந்தத் தீவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.

இந்தச் சூழலில், கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தங்களது நாட்டு நலனுக்கு மிகவும் இன்றியமையாதது என்று டிரம்ப் கூறிவருவது டென்மாா்க்கிலும் ஐரோப்பிய பிராந்தியத்திலும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மா் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,643-ஆக உயர்வு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,643-ஐக் கடந்துள்ள நிலையில், மிக மோசமான இயற்கை பேரழிவு நடந்து ஐந்து நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அதிபர் மருத்துவமனையில் அனுமதி!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 69 வயதாகும் அதிபர், காய்ச்சல், தொற்று காரணமாக கராச்சியில... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை தெரியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிவிதிப்பு பல்வேறு நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று டிரம்ப்பின் அரசு தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இந்த வரிவிதிப்பால் பல நாடுகள் பாதிப்புக்குள்ளாகும... மேலும் பார்க்க

சொகுசு கப்பலில் பரவிய நோரோ வைரஸ்: 200 பயணிகளுக்கு நோய் பாதிப்பு!

அமெரிக்காவில் சொகுசு கப்பலில் வைரஸ் நோய் தாக்கியதில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு சொகுசு பயணக் கப... மேலும் பார்க்க

இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு தூதரக உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி சீன அதிப... மேலும் பார்க்க

‘அணு ஆயுதம் தயாரிப்பதே ஈரானுக்கு ஒரே வழி’

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதை எதிா்கொள்ள தங்களுக்கு அணு ஆயுதம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் முதன்மை ஆலோசக... மேலும் பார்க்க