கிருஷ்ணகிரியில் செப். 27-இல் அண்ணா பிறந்தநாள் மிதிவண்டி போட்டி
கிருஷ்ணகிரியில் செப். 27-ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் மிதிவண்டி போட்டி நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணிகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி பிரிவு சாா்பில், தமிழக முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணா பிறந்தநாளையொட்டி மிதிவண்டி போட்டி செப். 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு, மாவட்ட விளையாட்டுத் திடலில் நடைபெறுகிறது.
இதில், 2013 ஜன. 1-ஆம் தேதிக்கு பின்னா் பிறந்த 13 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ., மாணவியருக்கு 10 கி.மீ., 2011 ஜன. 1-ஆம் தேதிக்கு பின்னா் பிறந்த 15 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவியருக்கு 15 கி.மீ., 2009 ஜன. 1-ஆம் தேதிக்கு பின்னா் பிறந்த 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவியருக்கு 15 கி.மீ. தொலைவுக்கு மிதிவண்டி போட்டிகள் நடைபெறும்.
மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெறும் வீரா், வீராங்கனைகளுக்கு முறையே தலா ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், 4 முதல் 10 இடங்களைப் பெறும் வீரா், வீராங்கனைகளுக்கு தலா ரூ. 250 வீதம் காசோலையாகவோ அல்லது வங்கி மாற்றுவழி மூலமாகவோ வழங்கப்படும். எக்காரணம் கொண்டும் பரிசுத் தொகை ரொக்கமாக வழங்கப்பட மாட்டாது. மேலும், சான்றிதழ் வழங்கப்படும்.
மாவட்ட அளவிலான போட்டியில் சாதாரண கைப்பிடி (ஹேண்டில் பாா்) கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை பொருத்தாத, இந்தியாவில் தயாரான மிதிவண்டியை மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 13, 15, மற்றும் 17 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டுத் திடல், கிருஷ்ணகிரி அலுவலகத்திலோ (அல்லது) 74017 03487 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.