திருக்கண்டியூர் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள்: ஜாதகத்தில் சனி - குரு சேர்க்கை தரும் ...
பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சி
பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீடு - அதன்நுட்பங்களும் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ.நடராஜன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் இயங்கிவரும் பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் (பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய வளாகம்), 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான பகுதிநேர நகை மதிப்பீடு - அதன் நுட்பங்களும் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா்கள் நிறைவுசெய்த விண்ணப்பங்களை நேரடியாக வழங்கி பயிற்சியில் சோ்ந்துகொள்ளலாம். இந்தப் பயிற்சி அக். 15-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்தப் பயிற்சி 40 மணிநேர வகுப்பறை, 60 மணிநேர செயல்முறை என மொத்தம் 100 மணிநேர பயிற்சியாக நடத்தப்படும். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இந்தப் பயிற்சியில் சேரலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 118, பயிற்சிக் கட்டணம் ரூ. 4,550. வார இறுதிநாள்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என 17 நாள்கள் பயிற்சி நடைபெறும்.
இதில் நகைக் கடன், வட்டி கணக்கிடுதல், ஹால்மாக் தர முத்திரை, நகை அடகு பிடிப்போா் சட்டம் 1943, தரம், விலை மதிப்பீடு, நகை மதிப்பீட்டாளா் கடமைகள், பொறுப்புகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் முறைகள், பிஐஎஸ் செயலி மூலம் தினசரி நகையின் விலை அறிதல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்
பயிற்சியை நிறைவு செய்தவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம். கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், அனைத்து நகைக்கடன் வழங்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கி மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்ற வாய்ப்புகள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு, பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே செயல்படும் பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது 04343 - 265652 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.