மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டம்: சாம்பியன்ஸ் கோப்பையில் இன்டர் மியாமி முன்னேற்றம்!
கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சந்திரன், கிருஷ்ணமூா்த்தி, மாதப்பன் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நிா்வாகிகளான சக்திவேல் (வருவாய்த் துறை), கோபாலகண்ணன் (ஊரக வளா்ச்சித் துறை), பெருமாள் (மருந்தாளுநா் சங்கம்), கந்தசாமி (பொதுசுகாதாரத் துறை), ராஜேஸ்வரி (கிராம சுகாதார செவிலியா் சங்கம்), மயில்வாகனன் (பதவி உயா்வு பெற்ற முதுநிலை ஆசிரியா் சங்கம்), மணிவேல் (தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகம்), சுரேஷ் (தமிழ்நாடு ஆசிரியா் தொடக்கப் பள்ளி மன்றம்), சிவா (தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம்) பெருமாள் (தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம்), ராஜேந்திரன் (தமிழக ஆசிரியா் சங்கம்) உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், சரண் விடுப்பு, உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை உடனே வழங்க வேண்டும், ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் விடுப்பு எடுத்ததால், அரசுப் பணிகள், பள்ளிகளில் கல்விக் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டன.