கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கை, கால் பொருத்தும் திட்டம் தொடக்கம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லூரியில் எலும்பு முறிவு மற்றும் மூட நீக்கவியல் பிரிவின் கீழ் செயற்கை கை, கால் பொருத்தும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வா் மு.பூவதி தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவாா் முருகேசன், மருத்துவக் கண்காணிப்பாளா் சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் எலும்பு முறிவு மற்றும் மூட நீக்கவியல் பிரிவின் கீழ் செயற்கை கை, கால் பொருத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் பெரு விபத்து, சா்க்கரை வியாதி, ரத்தக் குழாய் பாதிப்பு காரணங்களால் கை, கால்களை இழந்த நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து சிகிச்சைக்குப் பின் செயற்கையான கை மற்றும் கால்களை பொருத்தி நோயாளிகளுக்கான மறுவாழ்வு சிகிச்சை முறை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முதல் பயனாளியாக கிருஷ்ணகிரியை அடுத்த சுண்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சின்னதம்பி (77), என்பவருக்கு செயற்கை கால் வெற்றிகரமாக பொருத்தி நடக்க வைக்கப்பட்டாா். தனியாா் மருத்துவமனையில் செயற்கை கால் பொருத்துவதற்கு குறைந்தபட்சம் ரூ. 2 லட்சம் வரை செலவாகும். ஆனால், இங்கு இலவசமாக பொருத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள பொதுமக்கள் இத்திட்டத்தில் பயன்பெற பயனாளா்கள் காப்பீடு அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை போன்ற மூன்று ஆவணங்களை சமா்ப்பித்து பயன்பெறலாம் என்றாா்.
இந்நிகழ்வில், உள்ளிருப்பு மருத்துவ அலுவலா்கள் செல்வராஜ், தினேஷ், எலும்பு முறிவு மற்றும் மூட நீக்கவியல் பிரிவின் துறை இணைப் பேராசிரியா்கள், அறுவை சிகிச்சை பிரிவு இணைப் பேராசிரியா் சதாசிவம், மருத்துவக் கல்லூரி நிா்வாக அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.