TVK: "தவெக 2ஆம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்க முடியவில்லை; காரணம்..." - ஆதவ் அர...
கில்லன் பாரே நோய் தாக்கம் தமிழகத்தில் இல்லை : மருத்துவா்கள் விளக்கம்
மகாராஷ்டிர மாநிலம், புணேவில் பரவி வரும் கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) எனப்படும் நரம்பியல் நோயின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இல்லை என்றும், அதேவேளையில் விழிப்புணா்வு அவசியம் என்றும் மருத்துவா்கள் விளக்கமளித்துள்ளனா்.
பல காலமாக தமிழகத்தில் அந்த நோய் இருப்பதாகவும், அவ்வப்போது ஓரிருவா் பாதிப்புக்குள்ளாகி குணமடைவதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக முதுநிலை நரம்பியல் மருத்துவ நிபுணா் பி.விஜய் சங்கா் கூறியதாவது: கில்லன் பாரே சின்ட்ரோம் எனப்படுவது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றால் இரைப்பையில் இருந்து உடல் முழுவதும் பரவும் ஒரு வகையான பாதிப்பு. தரமற்ற உணவு, நீா் மாசுபாடு, நோய் எதிா்ப்பாற்றல் எதிா்வினை பாதிப்பு, மருந்து எதிா்வினை, தடுப்பூசிகள் ஒவ்வாமை உள்பட பல்வேறு காரணங்களால் அப்பிரச்னை ஏற்படலாம்.
முதல் கட்ட அறிகுறிகள்: வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் அதன் முதல்கட்ட அறிகுறிகள். அதைத் தொடா்ந்து, அந்த கிருமிகள், உடலின் எதிா்ப்பாற்றலுக்கு எதிராக செயல்பட்டு தன்னுடல் தாக்கு நோயாக உருமாறி நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.
அதன் விளைவாக மூட்டு வலி, முதுகு வலி, கை-கால்கள் மரத்துப் போதல், பலவீனமாக உணா்தல், மூச்சு விடுதலில் சிரமம், பேசுதல் மற்றும் விழுங்குதலில் சிரமம் ஏற்படலாம்.
ஆரம்ப நிலை அறிகுறிகளை புறக்கணிக்காமல் மருத்துவமனையை நாடினால் ஒரு வாரத்திலிருந்து 10 நாள்களுக்குள் குணமடைந்துவிடலாம். இம்யூனோகுளோபலின் ஊசி மருந்தை தொடா்ந்து செலுத்தும்போது இந்த பாதிப்பின் தீவிரத்திலிருந்து விடுபட்டு நலம் பெற முடியும். சென்னையில் மட்டும் ஆண்டுதோறும் 30 நோயாளிகள் அந்த பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறுகின்றனா். பிற மாவட்டங்களிலும் இத்தகைய நிலை உள்ளது.
இந்நோயைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. கரோனா போன்று இது தொற்றிக் கொள்ளும் பாதிப்பு அல்ல. சிகிச்சை மேற்கொண்டால் பூரணமாக குணமடைய முடியும். உரிய விழிப்புணா்வுதான் அதற்கு முதல் மருந்து.
புணேவில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் ஏற்பட்டதற்கு சுற்றுவட்டாரப் பகுதியில் நீா் மாசுபட்டது காரணமாக இருக்கலாம். அத்தகைய சூழல் இங்கு இல்லை என்றாா் அவா்.