செய்திகள் :

திமுகவை எதிர்க்கும் துணிவின்றி மறைமுக யுத்தம்: முதல்வர்

post image

திமுகவை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி சில உதிரிகளைத் தூண்டிவிட்டு, மறைமுக யுத்தம் நடத்திப் பார்ப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

”இந்த முறை ஈரோடு கிழக்கில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் விரும்பியது மட்டுமின்றி, அரசியல் சூழலை நன்குணர்ந்த தோழமைக் கட்சியான காங்கிரஸ் பேரியக்கமும் தீர்மானித்து அறிவித்ததைத் தொடர்ந்து, தி.மு.க.,வின் வேட்பாளராக ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களின் அன்பைப் பெற்ற வி.சி.சந்திரகுமார் களமிறங்கியுள்ளார்.

அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் தொகுதியின் ஒவ்வொரு வீடாகச் சென்று கழகத்தின் மூன்றரை ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

திமுக அரசின் சாதனைத் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றிருப்பதால் தங்கள் வாக்குகள் உதயசூரியனுக்கே என்று ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் உறுதியளித்து வருகின்றனர்.

உங்களில் ஒருவனான எனது தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் ஈரோடு மாவட்டத்தின் நலன் சார்ந்த பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும், ஈரோடு மாவட்டத்தின் சிறப்பு மிக்க நெசவுத் தொழில், வணிகம் ஆகியவை வளர்ச்சி பெறும் வகையிலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் ஈரோடு கிழக்குத் தொகுதி பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

அவற்றில் முதன்மையான சில திட்டங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

1. ஈரோடு கிழக்குச் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெரியசேமூர் வார்டு 20 அம்பேத்கர் நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியில் புதிதாக ஆழ்துளைக் குழாய் கிணறு, நீர்மூழ்கி பம்ப் மோட்டார் அமைத்து குடிநீர் விநியோகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

2. ஈரோடு கிழக்குத் தொகுதிக்குள்பட்ட ஆர்.கே.வி. சாலையில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன காய்கறி சந்தை வளாகம் திறக்கப்பட்டு உள்ளது.

3. ஈரோடு ஈ.கே.எம் அப்துல் கனி மதரஸா ஆரம்பப் பள்ளியில் புதிதாக 5 வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் துவங்கப்பட்டுள்ளது.

4. ஈரோடு மாநகராட்சி, ராஜாஜிபுரம் பகுதியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் நவீன உடற்பயிற்சிக் கூடப் பணிகள் தொடங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

5. ஈரோடு கிழக்குச் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கோட்டை முனிசிபல் காலனி மற்றும் பெரியசேமூர் திரு.வி.க. வீதியில் பள்ளிச் சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.

6. ஈரோடு சூரியம்பாளையம் 7-ஆவது வார்டில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப நகர்நல மையத்தின் கூடுதல் கட்டடம் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

7. சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கோட்டை பகுதி வார்டு 28 முனிசிபல் காலனி பகுதியில் அங்கன்வாடி மையத்திற்குச் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

8. கருங்கல்பாளையத்தில் 272 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

9. ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் பிராமண பெரிய அக்ரஹாரத்தில் உள்ள பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டட மராமத்து பணி நடைபெற்று வருகிறது.

10. ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளுக்கான புதை சாக்கடைத் திட்டம் மீண்டும் தொடக்கப்பட்டு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது.

11. ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.1,600 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

12. ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நெரிசலைக் குறைத்திட, ஈரோடு வெளிவட்டச் சுற்றுச் சாலை தற்போது நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டையில் தொடங்கி ஈரோடு மாவட்டம், ஈரோடு – பெருந்துறை - காங்கயம் சாலை வரை 14 கிலோமீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ளது.

13. ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 2024 வரை 1,38,712 பயனாளிகள் பயனடைந்து உள்ளனர்.

14. பாதாள சாக்கடை, ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டப் பணிகளால் சேதமடைந்து போக்குவரத்துக்குச் சிரமம் ஏற்படுத்திய காவேரி சாலை முதல் ஆர்.கே.வி. ரோடு மணிக்கூண்டு சந்திப்பு வரை ரூ. 2 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார்சாலைகள் அமைக்கப்பட்டது.

15. ஈரோடு மாநகர மையப் பகுதியான கோட்டை, மணிக்கூண்டு, கருங்கல்பாளையம், மீனாட்சி சுந்தரனார் சாலை, நேதாஜி சாலை, ஆர்.கே.வி சாலை, முனிசிபல் சத்திரம், கச்சேரி வீதி மற்றும் காரைவாய்க்கால் ஆகிய பகுதிகளில் சுமார் 3000 குடியிருப்புகள், வணிக கட்டிடங்களுக்குப் பட்டா வழங்கப்பட்டது.

16. இளைஞர்கள் – மாணவ – மாணவிகளுக்கு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிக் கட்டடம் காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.6.17 கோடி மதிப்பீட்டில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

17. கருங்கல்பாளையம் வேபிரிட்ஜ் முதல் காவேரி சாலை ஆர்.கே.வி. ரோடு மணிக்கூண்டு வரை இரு பக்கமும் புதிதாகச் சாக்கடைகள் ஆழப்படுத்தி, தளம் அமைத்து கவரிங் சிலாப் முறையில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

18. ஈரோடு கிழக்குத் தொகுதியில் 10 இடங்களில் சுகாதார மையங்கள் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகளை நேரில் கண்டறிவதுடன், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளையும் வெளியிடும் வகையில் உங்களில் ஒருவனான நான் மேற்கொள்ளும் மாவட்டவாரியான ஆய்வுக்கூட்டத்தின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 19 அன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது, புதிய பேருந்து நிலையங்களுக்கான பணிகளின் நிலை, மஞ்சள் ஏற்றுமதி மையம் - மஞ்சள்தூள் உற்பத்தி மையம் ஆகியவற்றின் பணிகள், தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான தொடக்கக் கட்டப் பணிகள், மேலும் சில புதிய பணிகள் ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுசெய்து அவற்றை விரைந்து முடிக்க ஆணையிட்டுள்ளேன். தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், இடைத்தேர்தலுக்குப் பிறகு இந்தப் பணிகள் விரைவு பெறும்.

இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள திராவிட மாடல் அரசின் முன்னோடித் திட்டங்களான மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளி மாணவிகளின் உயர்கல்விக்கான புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கான தமிழ்ப்புதல்வன் திட்டம், விடியல் பயணம் திட்டம், காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல திட்டங்கள் ஈரோடு கிழக்குத் தொகுதியில் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர் முகாம் ஆகியவற்றில் ஈரோடு கிழக்குத் தொகுதியைச் சார்ந்த மக்கள் அளித்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கான குடும்ப அட்டைகள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க: தமிழக அரசியலின் கிழக்கு திசையாக தவெக மாறும்: விஜய்

கூடுதலாக துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், சாயக் கழிவுப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு, குப்பைகளைத் தரம் பிரிக்கும் வசதிகள், புதிய மேம்பாலத் திட்டங்கள், மகளிர் அரசுக் கல்லூரி, வேளாண் கல்லூரி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விசைத்தறிப் பயிற்சி மையங்கள், தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிக்கும்போது ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்கள் வைத்துள்ளனர். எந்தக் கோரிக்கை வைத்தாலும் அதனை உரிய முறையில் பரிசீலித்து, நிறைவேற்றித் தரக்கூடியதாக திராவிட மாடல் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கைதான், இந்த அரசின் திட்டங்களின் பயனாளிகளான ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்கள் புதிய கோரிக்கைகளை வைப்பதற்குக் காரணம்.

திமுக அரசின் மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதான், ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்கள் திமுக வேட்பாளருக்கு வழங்கும் மகத்தான ஆதரவு. இந்த அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையும் ஆதரவையும் எப்படியாவது சிதைக்க வேண்டும் என்று நாளொரு அவதூறையும் பொழுதொரு பொய்யையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பினாலும் அவை மக்கள் மன்றத்தில் எடுபடுவதில்லை. பொழுது சாய்வதற்குள் எதிர்க்கட்சிகளின் பொய்களும் அவதூறுகளும் பொடிப் பொடியாகிவிடுகின்றன.

திமுக வேட்பாளரை எதிர்க்க முடியாமலும், பொதுமக்களைச் சந்திக்கும் வலிமையில்லாமலும் அ.தி.மு.க, பா.ஜ.க. ஆகிய கட்சிகள் வழக்கம்போல அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளன. தி.மு.க.வை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி சில உதிரிகளைத் தூண்டிவிட்டு, மறைமுக யுத்தம் நடத்திப் பார்க்கின்றன.

தமிழ்நாட்டின் நலனுக்காகப் பாடுபடுகிற திமுக அரசையும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க அரசையும் தமிழ்நாட்டு மக்கள் சரியாக அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்கள். அதனை ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்கள் இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு அளிக்கும் மகத்தான வெற்றியின் வாயிலாக நிரூபிப்பார்கள்.

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்கள் மீதும், அங்கே தேர்தல் பணியாற்றும் திமுக உடன்பிறப்புகள் மற்றும் தோழமைக் கட்சியின் செயல்வீரர்கள் மீதும் உங்களில் ஒருவனான நான் வைத்திருக்கும் நம்பிக்கையினாலும், என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையினாலும், நான் நேரில் வந்து வாக்கு சேகரித்ததாகக் கருதி, தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அவர்களுக்கு பிப்ரவரி 5-ஆம் தேதியன்று உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை அளித்து மகத்தான வெற்றியை அளிக்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

நம்மை வழிநடத்தும் தலைவரும், நம் தலைவர்களுக்கெல்லாம் தலைவருமான பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறும் இடைத்தேர்தலில், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம்முடைய தொடர் வெற்றி அமையட்டும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையில், ‘வெல்வோம் 200 – படைப்போம்’ வரலாறு என்பதற்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றியை எதிர்நோக்குகிறேன், உடன்பிறப்புகளின் உழைப்பினாலும், மக்கள் மீது உள்ள நம்பிக்கையினாலும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2 ராம்சார் பகுதிகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

உலக ஈரநிலங்கள் நாளை முன்னிட்டு, மேலும் 2 ராம்சார் பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்இது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:”உலக ஈரநிலங்கள் நாளான இன்... மேலும் பார்க்க

கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி: ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி!

குறிப்பிட்ட சில அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கு கனடா பதிலட... மேலும் பார்க்க

தவெக ஆண்டு விழா: கொள்கைத் தலைவர்களின் சிலைகளைத் திறந்த விஜய்!

தமிழக வெற்றிக்கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு கொள்கைத் தலைவர்களின் சிலைகளை விஜய் திறந்து வைத்தார். மேலும் பார்க்க

பிப். 7-ல் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பிப். 7 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது பற்றி தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மா... மேலும் பார்க்க

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மண்ணச்சநல்லூர்: பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தைப்பூச பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூ... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!

மகா கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு வீடு திரும்பியபோது நடந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு பி... மேலும் பார்க்க