போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!
குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபடும் இயக்கங்களுடன் மெக்சிகோ தொடர்பில் இருப்பதாகக் கூறிய வெள்ளை மாளிகையின் குற்றச்சாட்டை அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
வட அமெரிக்காவின் மூன்று முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கும் மெக்சிகோ, கனடா இடையே வணிக உறவில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய வரி விதிப்பு இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபடும் இயக்கத்துடன் மெக்சிகோ அரசு, தொடர்பில் இருப்பதாக அமெரிக்கா முன்வைத்த அவதூறையும் உள்விவகாரங்களில் தலையிடுவதையும் திட்டவட்டமாக எதிர்க்கிறோம் என அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாம் தெரிவித்துள்ளார்.
ஃபென்டாலின் என்ற வலிநிவாரணி புழக்கம் மற்றும் அமெரிக்க - மெக்சிகோ உறவு குறித்து பதிவிட்டுள்ள அவர்,
''அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு மற்றும் பேச்சுவார்த்தையையே மெக்சிகோ விரும்புகிறது. மாறாக அடிபணிதலையும் மோதல் போக்கையும் அல்ல.
அமெரிக்க அரசு மற்றும் அதன் ஏஜென்சிகள், தனது நாட்டு மக்களிடையே ஃபென்டாலின் புழக்கத்தை தடுக்க விரும்பினால், அதன் முக்கிய நகரங்களின் வீதிகளில் விற்கப்படும் போதைப் பொருள்களைத் தடுக்க வேண்டும். இதனை அவர்கள் செய்யவில்லை. இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படும் முறைகேடான பணம் நாட்டு மக்களை கடுமையாக பாதிக்கிறது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஃபென்டாலின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மெக்சிகோ அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை மேற்கோள் காட்டியுள்ள அவர், ''கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து 20 மில்லியன் டோஸ் ஃபென்டாலின் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 10 ஆயிரம் பேரை கைது செய்துள்ளது'' என கிளாடியா ஷீன்பாம் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு புதிய வரி: டிரம்ப் அதிரடி!