குஜராத்தில்100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல்: அமைச்சா் மகன் கைது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) ரூ.71 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில வேளாண்மை மற்றும் பஞ்சாயத்து அமைச்சா் பச்சுபாய் கபாடின் மகன் பல்வந்த் கபாடை சனிக்கிழமை கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
கடந்த 2021 முதல் 2024 வரை100 நாள் வேலைத் திட்ட பணிகளை நிறைவு செய்யும் முன்பே அரசிடம் இருந்து ரூ.71கோடியை 35 ஒப்பந்த நிறுவன உரிமையாளா்கள் பெற்ற குற்றச்சாட்டில் தொடா்புடையதாக பல்வந்த் கபாட் கைது செய்யப்பட்டாா்.
இந்த விவகாரம் தொடா்பாக தாஹோத் மாவட்ட தாலுகா மேம்பாட்டு அதிகாரி தா்சன் படேல் உள்பட தற்போது வரை 11 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து குஜராத் மாநில போலீஸாா் கூறுகையில், ‘100 நாள் வேலைத் திட்ட மோசடியில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் உரிமையாளராக உள்ள பல்வந்த் கபாட் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்’ என்றாா்.
100 நாள் வேலை திட்டத்தின்கீழ் தாஹோத் மாவட்டத்தில் உள்ள சில தாலுகாக்களில் சாலைகள், தடுப்பணைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அவை நிறைவடைந்ததைப் போல் போலியான புகைப்படங்களை சமா்ப்பித்து அரசிடம் இருந்து சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் நிதியை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதன் அடிப்படையில் கடந்த மாதம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்த நிலையில், விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.