குஜராத்: பார்சலில் அனுப்பப்பட்ட குண்டு வெடித்ததில் இருவர் காயம்; கைதானவர்கள் சொன்ன `பகீர்' காரணம்!
குஜராத் மாநிலம், அஹமதாபாத்தையடுத்த சபர்மதி என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை (21.12.24) காலை 10:45 மணியளவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததில், இருவர் காயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த கௌரவம் கதாவி என்பவர் போலீஸாரால் உடனடியாக கைதுசெய்யப்பட்டார். மேலும் விசாரிக்கையில் ரூபன் ராவ் என்பவரின் தனிப்பட்ட விரோத நோக்கத்தில் இது நடந்துள்ளது என்பது தெரியவந்தது.
44 வயதான ரூபன் ராவ் பிரிந்த தனது விவாகரத்தான மனைவியின் குடும்பத்தைப் பழிவாங்கும் எண்ணத்தில், இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. மேலும் அவரது மனைவியின் நண்பரான பால்தேவ் சுகாதியா என்பவரைப் பழிவாங்க வேண்டும் என்பதால், தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர் உதவியுடன் இத்தகைய செயலில் ஈடுபட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு உறுதுணையாக இருந்த ரோகன் ராவல் என்பவரும் கைது செய்யப்பட்டார். குண்டுகள் எப்படி தயாரிக்க வேண்டும் என்று கடந்த மூன்று, நான்கு மாதங்களாக ஆன்லைன் மூலம் கற்றுக்கொண்டதாக வாக்குமூலம் தெரிவித்துள்ளனர். இவர்களை கைதுசெய்ததைத் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட போலீஸ் குழு, அவர்களது காரில் இரண்டு வேறு குண்டுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். சல்பர் பவுடர், கன் பவுடர் போன்றவற்றைக் கொண்டு அவை உருவாக்கப்பட்டிருந்தன என்பதும் தெரியவந்தது. மேலும் அவை ரிமோட் கன்ட்ரோல் குண்டுகள் என்றும் கண்டறிந்தனர். அதையடுத்து, குண்டுகள் மீட்கும் அமைப்பான BDDS, முறையே அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது மனைவியின் நண்பர் சுகாதியாவை வெடிகுண்டு மூலம் கொல்ல திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால் அன்றிரவு அவர் வீட்டில் இல்லாமல் போனதால், மறுநாளான சனிக்கிழமை இந்தக் கொலை நடத்தி முடிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர். அதன்படி, கௌரவ் கதாவி டெலிவரி மேன் போல் வந்து சுகாதியாவிடம் பார்சலைக் கொடுத்துள்ளார். பின்னர் ரிமோட் மூலம் அந்த குண்டை வெடிக்கச் செய்திருக்கின்றனர். அதில்தான் இருவர் காயமடைந்திருக்கின்றனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.