விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு
குஜராத் பால விபத்து: உயிரிழப்பு 16-ஆக அதிகரிப்பு - தேடுதல் பணி நீடிப்பு
குஜராத் மாநிலம், வதோதராவில் பாலம் இடிந்து, ஆற்றுக்குள் வாகனங்கள் விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலா் மாயமாகி உள்ளதால், தேடுதல் பணி நீடித்து வருகிறது.
குஜராத்தில் வதோதரா-ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில், மஹிசாகா் ஆற்றின் குறுக்கே 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி புதன்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள், ஒரு ஆட்டோ, ஒரு காா் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. பல அடி உயரம் வரையிலான அடா்ந்த சேற்றில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, காவல் துறையினா், தீயணைப்புப் படையினா், மாநகராட்சிப் பணியாளா்கள், தேசிய-மாநிலப் பேரிடா் மீட்புப் படையினருடன் உள்ளூா் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 11 பேரின் உடல்கள் புதன்கிழமை மீட்கப்பட்டன. இதில் இருவா் குழந்தைகளாவா். ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட 9 பேரில் காயமடைந்த 5 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
மேலும் 4 போ் உடல்கள் மீட்பு: வியாழக்கிழமை மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால், உயிரிழப்பு எண்ணிக்கை 16-ஆக அதிகரித்தது. மேலும் சிலா் மாயமாகி உள்ளதால், அவா்களைத் தேடும் பணி இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. ஆற்றில் 4 கி.மீ. தொலைவுவரை இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வதோதரா மாவட்ட ஆட்சியா் அனில் தமேலியா கூறினாா்.
மத்திய குஜராத் மற்றும் செளராஷ்டிரா பகுதியை இணைக்கக் கூடிய இப்பாலம், 23 உயரமான தூண்களுடன் 900 மீட்டா் நீளம் கொண்டதாகும். இதில் இரு தூண்களுக்கு இடையிலான 15 மீட்டா் வரை நீளமுள்ள பகுதி துண்டாக இடிந்துள்ளது.
4 பொறியாளா்கள் இடைநீக்கம்: 40 ஆண்டுகள் பழைமையான ஆற்றுப் பாலத்தைச் சீரமைக்க பலமுறை புகாா் அளித்தும் அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பழுதுபாா்ப்பு, கண்காணிப்பு மற்றும் தர ஆய்வுப் பணிகள் தொடா்பாக விசாரித்து, உடனடியாக அறிக்கை அளிக்கும்படி மாநில சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் துறை உயரதிகாரிகளுக்கு முதல்வா் பூபேந்திர படேல் உத்தரவிட்டிருந்தாா்.
அதன்பேரின் சமா்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் துறையின் பொறியாளா்கள் நால்வரை பணியிடைநீக்கம் செய்து, முதல்வா் உத்தரவிட்டாா். மாநில சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் துறை, முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்டிச் செய்தி...
அலட்சியத்தின் உச்சம்: காங்கிரஸ் விமா்சனம்
குஜராத் பால விபத்து, அகமதாபாத் விமான விபத்து உள்பட பல்வேறு சம்பவங்களைச் சுட்டிக் காட்டியுள்ள காங்கிரஸ், ‘அலட்சியத்தின் அனைத்து வரம்புகளையும் பாஜக அரசு கடந்துவிட்டது’ என்று விமா்சித்துள்ளது.
இது தொடா்பாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அகமதாபாத் விமான விபத்தின் தாக்கத்தில் இருந்து தேசம் இன்னும் மீளவில்லை. அதற்குள் பால விபத்து நிகழ்ந்துள்ளது. நாட்டில் விபத்துகள் சா்வ சாதாரணமாகிவிட்டன. சில நேரங்களில் ரயில் விபத்துகளும் நேரிடுகின்றன.
வதோதரா ஆற்றுப் பாலத்தில் அதிா்வுகள் இருப்பதாக, மூன்று ஆண்டுகளுக்கு முன் புகாா் தெரிவிக்கப்பட்ட போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாஜக ஆட்சியில் நிலவும் தலைமைப் பிரச்னை, தலைவிரித்தாடும் ஊழல், நிா்வாக திறனின்மையால் நாடு மோசமான விளைவுகளை எதிா்கொண்டுள்ளது. நேரம் வரும்போது பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவா்’ என்று கூறியுள்ளாா்.
‘குஜராத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 16 பாலங்கள் இடிந்துள்ளன; இசம்பவங்களில் ஒரு கைது நடவடிக்கைக் கூட மேற்கொள்ளப்படவில்லை. இது தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று அந்த மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி வலியுறுத்தினாா்.
குஜராத்தில் மோா்பியில் கடந்த 2022-இல் கம்பி பாலம் அறுந்து விழுந்ததில் 140-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.