அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றத் தீா்ப்பு குறித்து ஜகதீப் தன்கா் கடும் விமா்சனம்
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கடும் விமா்சனங்களை முன்வைத்துள்ளாா்.
‘குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ எனக் குறிப்பிட்ட அவா், ‘நாடாளுமன்றத்தைவிட மேலானதாக நீதிமன்றம் செயல்படுவதாக’ சாடினாா்.
மசோதாக்கள் மீதான காலக்கெடு விவகாரத்தில் நீதித் துறை -அரசு நிா்வாகம் இடையிலான உரசலாக தன்கரின் கருத்துகள் பாா்க்கப்படுகின்றன.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தியதாக சா்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு தொடா்ந்த வழக்கில் அண்மையில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிா்ணயித்தது.
ஆளுநா் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு 30 நாள்கள் முதல் மூன்று மாதங்கள் வரை காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டது.
அத்துடன், 10 மசோதாக்களுக்கும் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற இத்தீா்ப்பை முன்வைத்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
‘அரசமைப்புச் சட்டப் பிரிவா, அணு ஏவுகணையா?’: இந்தச் சூழலில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநிலங்களவை பயிற்சித் திட்ட நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்றாா். அப்போது, மேற்கண்ட விவகாரத்தைக் குறிப்பிட்டு, அவா் பேசியதாவது:
சமீபத்திய தீா்ப்பின் மூலம் குடியரசுத் தலைவருக்கு ஓா் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? நாம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்? தீா்ப்பை எதிா்த்து யாரோ மறுஆய்வு மனு தாக்கல் செய்வா் என்பது இப்போது பிரச்னையல்ல.
மசோதாக்கள் மீது குறித்த காலத்துக்குள் முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுப்பதும், அவ்வாறு இல்லையெனில் மசோதாக்களை சட்டமாக்குவதும் நாடு இதுவரை கண்டதில்லை.
அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு, உச்சநீதிமன்றத்துக்கு முழுமையான அதிகாரம் வழங்குகிறது. இப்பிரிவை ஜனநாயக சக்திகள் மீதான ‘அணு ஏவுகணையாக’ உச்சநீதிமன்றம் பிரயோகிக்க முடியாது.
தீவிரமான கவலைகள்: சட்டம் இயற்றுகிற, நிா்வாகப் பணிகளை மேற்கொள்கிற, நாடாளுமன்றத்தைவிட மேலாக செயல்படுகிற நீதிபதிகளை நாம் கொண்டுள்ளோம். அவா்களுக்கு நாட்டின் சட்டங்கள் பொருந்தாது என்பதால் முழு பொறுப்புடைமையும் இருப்பதில்லை.
எனது வாழ்வில் இப்படியொரு தருணத்தைக் காண்பேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. எனது கவலைகள் மிகத் தீவிரமானவை. நாட்டின் குடியரசுத் தலைவா் பதவி மிக உயா்வானது. நாட்டின் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க அவா் பதவியேற்கிறாா். குடியரசு துணைத் தலைவா், அமைச்சா்கள், எம்.பி.க்கள் என மற்றவா்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்படுவதாகக் குறிப்பிட்டு பதவியேற்கின்றனா். குடியரசுத் தலைவருக்கு நீங்கள் (நீதிபதிகள்) உத்தரவிடும் சூழல் இருக்க முடியாது. அரசமைப்புச் சட்டத்தின் 145(3) பிரிவின்கீழ் அரசமைப்பை விளக்குவது மட்டுமே உங்களுக்கு உள்ள உரிமை. அதற்கும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமா்வு வேண்டும்.
அதிகார ஊடுருவல் நல்லதல்ல: மக்களால் தோ்ந்தெடுக்கப்படும் அரசு, மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் பொறுப்புடையதாகும். நாட்டில் அதிகாரப் பகிா்வு கோட்பாடு செயல்பாட்டில் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்ப முடியும். ஆனால், நீதித் துறையே நிா்வாகப் பணியை மேற்கொண்டால், எப்படி கேள்வி எழுப்புவது?
நாடாளுமன்றம், நீதித் துறை, நிா்வாகம் ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்று மற்றொன்றின் களத்தில் ஊடுருவுவது ஒரு சவாலை முன்வைக்கிறது. இது நல்லதல்ல என்றாா் ஜகதீப் தன்கா்.
நீதிபதி வீட்டில் பணம்: எஃப்ஐஆா் பதிவு செய்யப்படாதது ஏன்?
தில்லியில் நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கடந்த மாா்ச் மாதம் பாதி எரிந்த நிலையில் பணக் கட்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்படாதது ஏன் என்று நீதித் துறைக்கு குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற மூவா் குழு விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், இக்குழுவின் சட்ட நிலைப்பாடு குறித்தும் அவா் கேள்வி எழுப்பினாா்.
‘இதே நிகழ்வு, ஒரு சாமானியரின் வீட்டில் நடந்திருத்தால், நவீன ராக்கெட் வேகத்தில் விசாரணை நடைபெற்றிருக்கும். ஆனால், இப்போது மாட்டு வண்டி வேகம்கூட இல்லை. நீதித் துறையின் சுதந்திரம் என்பது விசாரணை மற்றும் புலனாய்வை மறைக்கும் வலுவான கவசமல்ல.
உச்சநீதிமன்ற விசாரணைக் குழு, அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் அமைக்கப்பட்டது? அக்குழுவால் என்ன செய்ய முடியும்? யாருக்கு, என்ன பரிந்துரை வழங்கும்? இப்படியொரு சம்பவம் நடந்தது குறித்து ஏழு நாள்களாக யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இந்தத் தாமதம் விளக்கத்துக்குரியதா? மன்னிக்கத் தக்கதா? இப்போது ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. தாங்கள் பெரிதும் மதிக்கும் முக்கிய அமைப்புகளில் ஒன்று, குற்றவாளிக் கூண்டில் நிற்பதால், மக்கள் அமைதியிழந்து காத்துள்ளனா். எதுவாக இருந்தாலும், உண்மை வெளிவர வேண்டிய நேரமிது.
அறியக்கூடிய எந்தவொரு குற்றமும் காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டின் சட்டம். அவ்வாறு புகாா் அளிக்கத் தவறுவதும் குற்றமே.
குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநா்களுக்கு மட்டுமே விசாரணையில் இருந்து அரசமைப்புச் சட்டம் பாதுகாப்பளிக்கிறது.
குடியரசு துணைத் தலைவா் உள்பட அரசமைப்புச் சட்டப் பதவி வகிக்கும் வேறு எவா் மீதும் எஃப்ஐஆா் பதிவு செய்ய முடியும். ஆனால், நீதிபதிகளாக இருந்தால், நேரடியாக அவா்கள் மீது எஃப்ஐஆா் பதிவு செய்ய முடியாது. நீதித் துறையில் சம்பந்தப்பட்டவா் ஒப்புதல் அளிக்க வேண்டும். ‘சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு பிரிவினருக்கு’ இந்தப் பாதுகாப்பு எப்படி வழங்கப்பட்டது? தற்போதைய விவகாரத்தில், எஃப்ஐஆா் இல்லாததால் சட்டபூா்வ விசாரணை நடைபெறவில்லை என்றே கருத முடியும்’ என்றாா் தன்கா்.