குடும்ப வன்முறை; பாதிக்கப்பட்ட மனைவிக்கு ரூ.2 லட்சம் வழங்க உத்தரவு - தொடர் சிக்கலில் மகா., அமைச்சர்
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக அமைச்சராக இருப்பவர் தனஞ்சே முண்டே. இவர் சமீப காலமாக தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஏற்கனவே தனஞ்சே முண்டேயிக்கு நெருக்கமான ஒருவர் பஞ்சாயத்து தலைவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தனஞ்சேயின் சொந்த மாவட்டமான பீட் மாவட்டத்தில், காற்றாலை உரிமையாளர்களிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டி பணம் பறித்ததை தட்டிக்கேட்டதால் பஞ்சாயத்து தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை மற்றும் மிரட்டி பணம் கேட்டதில் அமைச்சர் தனஞ்சே முண்டேயிக்கு தொடர்பு இருக்கிறது என்று எதிர்க்கட்சிகளும், பா.ஜ.க எம்.எல்.ஏ.சுரேஷ் தாஸ் என்பவரும் கூறி வருகின்றனர். அதோடு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தவிர இதற்கு முன்பு அமைச்சராக இருந்த போது கொரோனா காலத்தில் அமைக்காத சாலைக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி மோசடி செய்ததாகவும் தனஞ்சே முண்டே மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது மேலும் ஒரு சிக்கலில் தனஞ்சே முண்டே சிக்கி இருக்கிறார். தனஞ்சே முண்டேயின் மனைவி கருணா முண்டே தனது கணவருக்கு எதிராக குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த மும்பை பாந்த்ரா குடும்ப நீதிமன்றம் அமைச்சர் தனஞ்சே முண்டே தனது மனைவி கருணா முண்டேயிக்கு மாதம் ரூ.2 லட்சம் கொடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.
இது குறித்து கருணா முண்டே கூறுகையில், ''கோர்ட் மூலம் எனக்கு நீதி கிடைத்திருக்கிறது. குழந்தைகள் இப்போது என்னுடன் இருக்கின்றனர். எனவே ரூ.2 லட்சம் என்பதை 5 லட்சமாக அதிகரித்து கொடுக்கவேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும். இந்த பணத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக போராடினேன். இப்போராட்டத்தின் போது சொல்ல முடியாத அளவுக்கு நான் கஷ்டங்களை அனுபவித்தேன். நான் அமைச்சருடன் போராடினேன். எனது வழக்கறிஞர் வெறும் ஒரு ரூபாய் பெற்றுக்கொண்டு எனக்காக வாதாடினார். இன்றைக்கு நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
கருணா முண்டேயிக்கு வாழ்த்து தெரிவித்து மகாராஷ்டிரா ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி அஞ்சலி தமானியா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அமைச்சர் தனஞ்சே முண்டே தனது முதல் மனைவி கருணா முண்டேயை அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. கோர்ட் உத்தரவு அஜித்பவார் கட்சி அமைச்சர் தனஞ்சே முண்டேயிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!