நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மாதவன் - சித்தார்த்தின் டெஸ்ட்!
உடல் நிலை குறித்து தவறான தகவல்; யூடியூப் வீடியோவை நீக்குமாறு ஐஸ்வர்யா ராய் மகள் கோர்ட்டில் வழக்கு!
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பச்சன் குறித்து அடிக்கடி எதாவது தகவல் வந்து கொண்டே இருக்கிறது. ஐஸ்வர்யா ராய் எங்கு சென்றாலும் தனது மகளை கூடவே அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு யூடியூப் மற்றும் இணையதளங்களில் நடிகை ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் மகள் ஆராத்யா பச்சனின் உடல் நிலை குறித்து தவறான வீடியோ மற்றும் தகவல்கள் வெளியானது. அப்போதே அபிஷேக் பச்சன் மூலம் ஆராத்யா அந்த வீடியோ மற்றும் இணையதள செய்திகளை அகற்ற உத்தரவிடவேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில், `நான் பள்ளிக்குச் செல்லும் ஆரோக்கியமான குழந்தையாக இருந்தாலும், விளம்பரத்திற்காக சில விஷமிகள் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக யூடியூபில் வீடியோக்களை பரப்பி வருகின்றனர். ஒரு வீடியோவில் நான் இறந்துவிட்டதாக குறிப்பிட்டு இருந்தனர்.
அவர்களின் கருத்துகளை உண்மை என்று தெரிவிக்க சில மார்பிங் செய்யப்பட்ட படங்களை வீடியோவில் பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் தனியுரிமை மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறுவதாகவும், படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்துவதன் மூலம் பதிப்புரிமை உட்பட பச்சன் குடும்பத்திற்கு உள்ள சொத்துரிமைகளை மீறுவதாக இருக்கிறது" என்றும் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உடனடியாக யூடியூபில் உள்ள ஆராத்யா தொடர்பான வீடியோக்களை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி கூகுள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. அதோடு ஆராத்யாவின் உடல்நிலை குறித்த தவறான தகவல் அடங்கிய வீடியோவை தொடர்ந்து யூடியூபில் பகிரவும் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.
அப்படி இருந்தும் யூடியூப்பில் சம்பந்தப்பட்ட வீடியோ நீக்கப்படவில்லை. இதையடுத்து ஆராத்யா பச்சன் மீண்டும் ஒரு மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அதில் தனது உடல் நிலை குறித்த வீடியோக்கள் மற்றும் தகவல்களை யூடியூப் மற்றும் இணையத்தளங்களில் இருந்து அகற்ற உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடு இதற்கு முன்பு தான் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவில் இடம் பெற்று இருக்கும் தகவல்கள் தொடர்பான அறிக்கையை வழங்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இம்மனு நீதிபதி மினி புஷ்கர்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் வீடியோவை பதிவேற்றம் செய்தவர்கள் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை கூற வாய்ப்பு இருக்கிறது என்று கூறி மனு மீதான விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதோடு கூகுள், பாலிவுட் டைம் மற்றும் இணையத்தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.