முதல்வர் பதவி... மும்பை முதல்வர் இல்லத்தில் எருமையை பலியிட்டு பில்லிசூனியம் வைத்தாரா ஏக்நாத் ஷிண்டே?
மகாராஷ்டிராவில் முதல்வராக இருப்பவர்களுக்காக வர்ஷா என்ற அரசின் அதிகாரப்பூர்வ இல்லம் இருக்கிறது. இந்த இல்லத்தில் தான் முதல்வர் மற்ற அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அதிகாரப்பூர்வ சந்திப்புகளை மேற்கொள்வது வழக்கம். தற்போது மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்று மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால் இன்னும் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவிற்கு தேவேந்திர பட்னாவிஸ் குடியேறவில்லை. அதோடு முன்னாள் முதல்வரும், தற்போது துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து வர்ஷா இல்லத்தில் வசித்து வருகிறார். அவர் இன்னும் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்யாமல் காலம் கடத்தி வருகிறார். இது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளது.
சிவசேனா(உத்தவ்) முதல்வர் இல்லத்தில் பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறது. இது குறித்து அக்கட்சியின் எம்.பி.சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், ''முதல்வரின் வர்ஷா இல்லத்தில் பில்லிசூனியம் வைக்கப்பட்டுள்ளது.
துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவி கையைவிட்டு போகக்கூடாது என்பதற்காக முதல்வரின் வர்ஷா இல்லத்தில் எருமை மாட்டை பலியிட்டு அதனை வர்ஷா இல்லத்தில் புதைத்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே அஸ்ஸாமில் உள்ள காமாக்யா கோயிலுக்கு சென்றபோது இந்த நிகழ்வு நடந்துள்ளது. இதனால்தான் தற்போது முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் அரசு இல்லத்திற்கு போகாமல் இருந்து வருகிறார்''என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது மிகப்பெரிய விவாத பொருளாக மாறியதை தொடர்ந்து இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தான் அரசு இல்லத்திற்கு செல்லாமல் இருப்பதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில்,''வர்ஷா இல்லத்தை ஏக்நாத் ஷிண்டே காலி செய்தவுடன் நான் அந்த வீட்டிற்கு செல்வேன். அந்த வீட்டில் சிறிய அளவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதோடு எனது மகள் இப்போது 10வது வகுப்பு படித்து வருகிறார். அவரது தேர்வு முடிந்த பிறகு அரசு இல்லத்திற்கு செல்லாம் என்று இருக்கிறேன். அதனால்தான் அரசு இல்லத்திற்கு செல்லவில்லை. பில்லி சூனியம் வைக்கப்பட்டதால்தான் நான் அங்கு செல்லவில்லை என்று சொல்லப்படுவதில் எந்த வித உண்மையும் இல்லை. என்னைப்போன்ற பதவியில் இருக்கும் ஒருவர் இது போன்ற வதந்திகளுக்கு பதிலளிக்க தகுதியற்றது'' என்றார்.
இது குறித்து துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ''பில்லி சூனியத்தில் அனுபவம் உள்ள ஒருவரால்தான் இது போன்று கூற முடியும்''என்று தெரிவித்தார். மகாராஷ்டிராவில் பில்லி சூனியத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.