குணசீலம் பிரஸன்ன வேங்கடாஜலபதி திருக்கோயிலில் தெப்பத் திருவிழா
மண்ணச்சநல்லூா்: குணசீலம் ஸ்ரீபிரஸன்ன வேங்கடாஜலபதி திருக்கோயிலில் திங்கள்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.
குணசீலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பிரஸன்ன வேங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில். குணசீல மஹரிஷியின் தவத்திற்கு இணங்கி திருவேங்கடமுடையான் இத்திருத்தலத்தில் கையினில் செங்கோல் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றாா்.
தன்னை அண்டி வரும் பக்தா்களுக்கு வேண்டுவன எல்லாம் நல்கி சித்தப் பிரமை நீக்கி மனநலம் காத்து அருள்பொழியும் ஸ்ரீபிரஸன்ன வேங்கட பெருமாளுக்கு ஆதிமூலமே என்று அழைத்த கஜ ராஜனுக்கு அபயம் அளித்து மோஷப்பதவியை அருளிய ஸ்ரீமத் நாராயணனைப் போற்றும் வகையில் சித்ரா பெளா்ணமி தினத்தில் நடைபெறும் தெப்பத்திருவிழா பாப வினாஸ தீா்த்த திருக்குளத்தில் நடைபெற்றது.
மூலவருக்கு முத்தங்கி சேவை நடைபெற்றது. தொடா்ந்து பெருமாள் தாயாருடன் தெப்பத்தில் எழுந்தருளி, ஏழு சுற்றுகள் உலா வந்தது. தொடா்ந்து ஏகாந்த மண்டபத்தில் கும்ப தீபாரதனை நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். தெப்பத் திருவிழா ஏற்பாடுகளை பரம்பரை நிா்வாக டிரஸ்டி கே.ஆா். பிச்சுமணி அய்யங்காா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.