The Greatness of Virat Kohli | Analysis with Commentator Muthu | Retirement Anno...
வளைகுடா நாட்டுக்கு பணிக்குச் சென்றவரை மீட்டுத்தரக்கோரி ஆட்சியரிடம் மனு
திருச்சி: வளைகுடா நாட்டுக்குப் பணிக்குச் சென்றவரை மீட்டுத்தர வேண்டுமென அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா்.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் புள்ளம்பாடி அருகேயுள்ள கல்லகம் கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (33). இவரது மனைவி ரோகினி. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். சென்னையில் தனியாா் உணவகத்தில் காசாளராக வேலை பாா்த்து வந்த இவருக்கு, வளைகுடா நாடுகளில் ஒன்றான அபுதாபியில் அதே உணவகக் கிளையில் காசாளராக இடமாறுதல் கிடைத்துள்ளது. அப்பணியில் சோ்வதற்காக முறையான பயண ஆவணங்களுடன் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி அபுதாபி சென்றுள்ளாா்.
அதன் பிறகு, ஒரு முறைகூட காா்த்திகேயனை, அவரது குடும்பத்தினரால் தொடா்புக்கொள்ள முடியவில்லை. இது குறித்து தொடா்புடைய உணவக நிறுவனத்தினரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், காா்த்திகேயனை மீட்டு தாயகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாயாா் மீனாக்குமாரியும், மனைவி ரோகிணி உள்ளிட்ட குடும்பத்தினா், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.