`46 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டோம்’ தற்கொலை பெட்டியில் மரணமடைய பதிவு செய...
கூத்தைப்பாா் கண்ணுடைய அய்யனாா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா
திருச்சி: திருச்சி, திருவெறும்பூா் அருகே உள்ள கூத்தைப்பாா் கிராமத்தில் உள்ள கண்ணுடைய அய்யனாா், சாத்த பிள்ளை அய்யனாா் கோயில் சித்திரை தோ் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நிகழாண்டு மே 4 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கோயிலிலிருந்து சுவாமிகள் புறப்பட்டு வீதி உலா நடைபெற்றது. 7 ஆம் தேதி இரவு யானை வாகனத்திலும், 8 ஆம் தேதி அன்னபட்சி மற்றும் கொள்ளு திண்ணி குதிரை வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது. 9 ஆம் தேதி இரவு காவு பிடித்து காவு எரிதல் நிகழ்வும் 10 ஆம் தேதி இரவு சப்பரத்தில் சுவாமிகள் வீதி உலாவும், 11 ஆம் தேதி பச்ச பட்டினி நிகழ்வுகளும் நடைபெற்றது.
தோ் திருவிழா: திருவிழாவின் முக்கிய நிகழ்வான தோ் திருவிழா எனப்படும் தேரோட்ட நிகழ்ச்சி 12 ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெற்றது. தோ் திருவிழவையொட்டி அதிகாலை 6 மணிக்கு சுவாமிகள் தேரில் எழுந்தருளினா். பின்னா், தேரை வடம் பிடிக்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து தெற்கு தெரு, மேல தெரு, வடக்கு தெரு ஆகிய தெருக்களில் தோ் வீதியுலா வந்தது. கண்ணுடைய அய்யனாா் மற்றும் சாத்த பிள்ளை அய்யனாா் இருவரும் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
நான்கு வீதிகளிலும் வலம் வந்த தோ் நிலையை வந்தடைந்தது. அதன் பின்னா், இரவு மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடைந்தது. இதில் திருவெறும்பூா் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியைச் சோ்ந்த கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
