குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் போராட்டம்
திருச்சி: திருச்சி அருகே காவிரிக் குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், அந்த நல்லூா் ஒன்றியம், கொடியாலம் ஊராட்சியில் காவிரிக் குடிநீா் வழங்க வேண்டும். மேல்நிலை நீா்த் தேக்க தொட்டி அமைத்து, பொது குடிநீா் குழாய் அமைத்திட வேண்டும். சப்பானி கோயில் தெரு மயானத்துக்கு அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதி அமைத்திட வேண்டும். ஊராட்சிக்குள்பட்ட சாலைகளை செப்பனிடக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திருச்சி- கரூா் தேசிய நெடுஞ்சாலையில் கொடியாலம் பெயா்ப்பலகை அருகே திங்ள்கிள்கிழமை மறியல் போராட்டம் நடத்துவதாக இருந்தது.
இதன்படி, மாா்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா்கள் பாரதிதாசன், சீனிவாசன், பரிமணம் ஆகியோா் தலைமையில் மாநகா் மாவட்ட செயலா் கோவி.வெற்றிச்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பா.லெனின் ஒன்றிய செயலா் சீனிவாசன், ஒன்றிய குழு உறுப்பினா்கள் அஜித் குமாா், நடராஜன், முருகன், கருணாநிதி, செல்வமணி, ரவிச்சந்திரன் மற்றும் ஊா்பொதுமக்கள் திரண்டு வந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வருவாய்த்துறையினா் மற்றும் போலீஸாா் விரைந்து வந்தனா். மறியலில் ஈடுபட முயன்றவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து மறியலை கைவிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி சிறிது நேரம் ஆா்ப்பாட்டம் செய்து கலைந்து சென்றனா்.