செய்திகள் :

குமரி அனந்தன்: `காந்தியின் அந்த சொல்லும்; மக்களவையில் ஒலித்த தமிழும்' - தென்கோடியில் உதித்தப் போராளி

post image

தமிழக அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் (93) நேற்றிரவு மறைந்தார். காந்தியத்தால் ஈர்க்கப்பட்டு, காமராஜரைப் பின்தொடர்ந்தது மட்டுமல்லாமல், தமிழை உயிர் மூச்சென சுவாசித்து இறுதிவரை மக்கள் நலனுக்காக குரல்கொடுத்தவர் குமரி அனந்தன். இவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் என அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் குமரி அனந்தன் வாழ்க்கை வரலாற்றில் முக்கிய தருணங்களை சுருக்கமாகக் காணலாம்...

 குமரி அனந்தன்
குமரி அனந்தன்

கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலத்தில், சுதந்திரப் போராட்ட தியாகி அரிகிருஷ்ணன் - தங்கம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாக 1933, மார்ச் 19-ம் தேதி பிறந்தார் அனந்த கிருஷ்ணன். பின்னாளில்தான், குமரிமங்கலம் ஊர்ப்பெயரையும், அனந்த கிருஷ்ணன் என்ற இயற்பெயரையும் சேர்த்து குமரி அனந்தன் என்று அழைக்கப்பட்டார். தந்தை சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால், மக்களுக்காகப் போராட வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே இயல்பாக வந்திருக்கிறது. ஆனால், தேசபக்தி இவருள் வேரூன்றுவதற்கான விதையைப் போட்டது மகாத்மா காந்திதான்.

குமரி அனந்தன்
குமரி அனந்தன்

1934-ல் காந்தி ஒருமுறை நாகர்கோவிலுக்கு வந்தபோது, இவரின் தந்தை இவரை தோளில் ஏற்றிக்கொண்டு காந்தியைப் பார்க்கச் சென்றிருக்கிறார். அப்போது, "ஆங்கிலேயர்கள் நம் நாட்டு பருத்தியை இங்கிலாந்துக்கு கொண்டுசென்று இயந்திரத்தில் நெய்து, அதை இங்கு கொண்டுவந்து அதிக விலைக்கு நம்மிடமே விற்கின்றனர். இனி நம் நாட்டுப் பருத்தியை நாமே கைத்தறி மூலம் நெய்து கதராடையாக நாம் உடுத்த வேண்டும்." என்று காந்தி கூறியது இவரின் பிஞ்சு மனதில் ஆழப் பதிந்தது. காந்தியின் வார்த்தைக்கேற்ப தனது வாழ்நாள் முழுவதும் கதராடைகளை மட்டுமே இவர் உடுத்தினார்.

1967-ல் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்ளத் தொடங்கிய குமரி அனந்தன், தனது வாழ்நாளில் மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 17 முறை மக்களுக்காக நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார். 1984-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வேளையில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொண்டுவர வேண்டுமென்று களக்காட்டிலிருந்து ராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டார். அதோடு, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் இதுபற்றி எடுத்துச் சொன்னார்.

 குமரி அனந்தன்
குமரி அனந்தன்

அதே ஆண்டில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தை அறிவித்தார் எம்.ஜி.ஆர். ஆனால், கடமை முடிந்ததென்று அதோடு நிற்காமல், அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வேண்டுமென்று தொடர்ந்து குமரி வலியுறுத்த, பின்னாளில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அதற்கான திட்டம் ஒன்றை அறிவித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி-யின் சுதேசி கப்பல் நிறுவனம் 1911-ல் ஒழிக்கப்பட்டதற்கு காரணமான ஆங்கிலேய கலெக்டர் ஆஷ்துரை, மணியாச்சி என்ற ஊருக்கு ரயிலில் வந்தபோது, அவரை வாஞ்சிநாதன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார். அவரின் நினைவைப் போற்றும் வகையில், மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வாஞ்சி மணியாச்சி என்று பெயர் சூட்ட வேண்டும் என்று 1979-ல் குமரி அனந்தன் போராட்டம் நடத்தி சிறைக்குச் சென்றார்.

வாஞ்சி மணியாச்சி

பின்னர் ஒருமுறை ராஜீவ் காந்தி பிரதமராக தமிழகத்துக்கு வந்தபோது, இந்தக் கோரிக்கையை அவரிடம் எடுத்துவைத்தார். அதையடுத்து அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, வாஞ்சி மணியாச்சி என்று அந்த ரயில் நிலையத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

எந்த அளவுக்கு காந்தியவாதியாக தேசத்தை நேசித்தாரோ அதற்கு சற்றும் குறைவில்லாத அளவுக்கு தமிழை உயிர் மூச்சாக சுவாசித்தார். 1977-ல் நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று மக்களவைக்குச் சென்ற குமரி அனந்தன் அவையில் தமிழில் உரையாற்றுவதற்கு தொடர்ச்சியாகப் போராடினார். அதனால் பலமுறை பாதுகாவலளர்களால் அவையிலிருந்து வெளியேற்றவும் பட்டிருக்கிறார்.

குமரி அனந்தன் - கருணாநிதி
குமரி அனந்தன் - கருணாநிதி

ஆனால், போராடுவதை நிறுத்தாத குமரி அனந்தனுக்கு 1978-ல் மக்களவையில் தமிழில் பேசுவதற்கு அனுமதி கிடைத்தது. அதைத் தொடர்ந்து தமிழிலேயே உரையாற்றினார். இவரின் உறுதியைக் கண்டு கருணாநிதி, "தனிமரம் தோப்பாகாது என்ற பழமொழியை குமரி அனந்தன் மாற்றியமைத்துவிட்டார்" என்று பாராட்டினார்.

இவரின் மகள் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி மற்றும் தெலங்கானாவுக்கு ஆளுநராகப் பதவியேற்றபோது, அவருடனே ஹைதராபாத்துக்கு குமரி அனந்தன் சென்றுவிட்டார். ஆனால், மகளுக்கு தமிழிசை என்று பெயர்வைத்த தமிழ்ப் பற்றாளரால் தமிழைக் கேட்காமல் ஹைதராபாத்தில் இருக்க முடியவில்லை. "என் உயிர் தமிழோடு இணைந்தது. நான் தமிழ் பேச வேண்டும், தமிழைக் கேட்க வேண்டும். தமிழ்நாடுதான் எனக்கு சிறந்த இடம்" என்று மகளிடம் கூறிவிட்டு தமிழ்நாட்டுக்கே வந்துவிட்டார்.

தமிழிசை சௌந்தராஜன் - குமரி அனந்தன்
தமிழிசை சௌந்தராஜன் - குமரி அனந்தன்

இங்கு வந்தபிறகு, தங்குவதற்கு வீடு கேட்டு முதலமைச்சர் ஸ்டாலினடத்தில் இவர் கோரிக்கை வைக்க, உடனடியாக ஸ்டாலினும் அவருக்கு வீடு ஒதுக்கி கோரிக்கையை நிறைவேற்றினார். கடந்த ஆண்டு, தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதும் பெற்றார். இன்று அவரின் உயிரும், உடலும் என்றும் பிரிக்க முடியாத வகையில் தமிழோடும், தமிழ் மண்ணோடும் கலந்துவிட்டது.

குமரி அனந்தன்:

இவை மட்டுமல்லாது, மதுவிலக்கு என்ற காந்தியின் கொள்கையை வாழ்நாள் முழுவதும் போராட்டமாக முன்னெடுத்திருக்கிறார். போதைப்பொருள்களுக்கெதிராக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கும்போது அதைப் பாராட்டிய குமரி அனந்தன், மதுவை அரசே விற்பது தவறு என வெளிப்படையாக எதிர்த்தும் குரல்கொடுத்திருக்கிறார்.

குமரி அனந்தன் தனது பொதுவாழ்வில், 1977-ல் எம்.பி-யாகவும், 1980, 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

”திருமணமானதும் குழந்தை பிறக்காது” - பொன்முடியைத் தொடர்ந்து திமுக எம்பி கல்யாணசுந்தரம் சர்ச்சை பேச்சு

கும்பகோணம் தொகுதிக்கு உட்பட்ட, சேஷம்பாடி கிராமத்தில் 261 பேருக்கு, கலைஞரின் கனவு இல்லத்திற்கான வேலை தொடங்குவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், ராஜ்ய... மேலும் பார்க்க

`தப்பியதா... தள்ளிப்போனதா?’ ஊசலாட்டத்தில் பொன்முடியின் இலாகா!

வைணவ, சைவ சமயங்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்தச் சூழலில், அவரின் இலாகாவை மாற்றுவதற்கு ஆட்சி மேலிடம் ஆலோசித்த... மேலும் பார்க்க