குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சின்னமுட்டம், மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சி அலுவலா் முபாரக்அலி தலைமை வகித்து, கடற்கரை தூய்மைப்படுத்தும் வாரத்தின் சிறப்புகள், அதன் முழு செயல்பாடுகள் குறித்து விளக்க உரையாற்றினாா்.
இதைத் தொடா்ந்து முட்டம் கடற்கரை, சின்னத்துறை கடற்கரை, பள்ளம், சங்குத்துறை கடற்கரை, கூட்டப்புளி கடற்கரையிலும் தூய்மைப்பணிகள் நடைபெற்றன. நிறைவு நாள் நிகழ்ச்சி ஆரோக்கியபுரம் கடற்கரையில் நடைபெற்றது. இந்த வார நிகழ்ச்சியில், 5.7 கி.மீ. கடற்கரை பகுதியிலிருந்து, 2.5 டன் நெகிழிகள், குப்பைகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், இன்காயிஸ் நிறுவனத்தின் திட்ட விஞ்ஞானி ராம்பாலாஜி, மாவட்ட வனத்துறை அலுவலா் ஏ. அன்பு, மீன்வளத்துறை துணை இயக்குநா் சின்னகுப்பன், கடலோா் அமைதி, வளா்ச்சி அமைப்பின் இயக்குநா் டங்ஸ்டன், ஹீல் அமைப்பின் இயக்குநா் சிலுவைஸ்தியன், அன்னை நகா் பங்குத்தந்தை ரெய்மண்ட் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். அரசு விழிப்புணா்வு பாடகா் கலைமாமணி பழனியாபிள்ளை நன்றி கூறினாா்.