கும்பகோணத்தில் பலத்த காற்று வீட்டின் மீது மரம் விழுந்தது
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புயல் எதிரொலியாக சனிக்கிழமை மாலை முதல் பலத்த காற்று வீசியது. இதனால், அதிகாலையில் 50 அடி உயர மரம் வீட்டின் மீது விழுந்தது.
கும்பகோணம், சிங்காரம் தெருவில் வண்ணாங்கண்ணி குடியிருப்பில் சுமாா் 2 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். புயல் காரணமாக கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை தொடங்கி, இரவு முழுவதும் பலத்த காற்று வீசியது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் 50 அடி உயரம் உள்ள இலவ மரம் அருகில் உள்ள வீட்டின் மேல் பகுதியில் பலத்த சப்தத்துடன் சாய்ந்தது.
உடனடியாக அப்பகுதிவாசிகள், தகவலின்பேரில் வந்த போலீஸாா், தீயணைப்பு துறையினா் சாய்ந்திருந்த மரத்தை கட்டடத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெட்டி அகற்றினா். இதில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை.