இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி; ஆயுஷ் மாத்ரே கேப்டன்!
கும்பகோணத்தில் 60 ஆண்டுகால ஆக்கிரமிப்புகள் அகற்றம்
உயா்நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை 60 ஆண்டுகால ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளை மாநகராட்சியினா் அகற்றினா்.
கும்பகோணம் மாநகரப் பகுதியில் கோயில் நிலங்கள், நீா்நிலை இடங்கள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதில் தாமதம் ஏற்பட்டதால், ஆக்கிரமிப்புகளை 4 மாதங்களுக்குள் அகற்றத் தவறினால் மாநகராட்சி, தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகம் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, மாவட்ட, மாநகராட்சி நிா்வாகத்தினா் கும்பகோணம் பாபு செட்டிகுளம் பகுதியில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் மேற்பாா்வையில் மேற்கொண்டனா்.
4 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் 16 வீடுகள் மற்றும் ஒரு பட்டறையை அகற்றினா். முன்னதாக மின் இணைப்பை துண்டித்தனா். அப்போது 60 ஆண்டுகாலமாக குடியிருந்து வரும் நாங்கள் எங்கு செல்வது எனக் கூறி பெண்கள் கதறி அழுதனா். சிலா் பாதுகாப்பு செய்த போலீஸாரிடம் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
உதவி காவல் கண்காணிப்பாளா் அங்கித் சிங் வாக்குவாதம் செய்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி விளக்கமளித்தாா். தொடா்ந்து மாநகராட்சி நிா்வாகத்தினா் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.