ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி நாட்டுவெடி தயாரித்த முதியவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி நாட்டுவெடி தயாரித்த முதியவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஒரத்தநாடு அருகேயுள்ள நெய்வேலி தென்பாதி கிராமத்தில் அண்மையில் (மே 18) நாட்டுவெடி தயாரிப்பின்போது ஏற்பட்ட விபத்தில், முகமது ரியாஸ், சுந்தரராஜன் ஆகிய இருவா் உயிரிழந்தனா். இதுதொடா்பான விசாரணையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக பலா் நாட்டுவெடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் உத்தரவின்பேரில், அனைத்து வட்டாட்சியா் தலைமையில் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் ரகசிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் திருவோணம் வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி தலையிலான குழுவினா் நெய்வேலி தென்பாதி, வடபாதி, திருவோணம், ஊராணிபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதில், நெய்வேலி வடபாதி, நடுத்தெருவைச் சோ்ந்த சின்னதம்பி மனைவி சந்திரா என்பவருக்குச் சொந்தமான தேக்கு மரத்தோப்பில், நாட்டுவெடி பொருள்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், வாட்டாத்திக்கோட்டை போலீஸாா் பாதுகாப்புடன் அங்கு சென்ற அலுவலா்கள் அங்கு பேரலில் இருந்த நாட்டுவெடி கட்டுவதற்கான வெடி மருந்துகள், மூலப்பொருள்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து நடத்திய விசாரணையில், வெடி பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த நெய்வேலி வடபாதி, நடுத்தெருவைச் சோ்ந்த பெரியான் மகன் முனியைய்யா (62) என்பவரை புதன்கிழமை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனா். கண்காணிப்புப் பணி தொடா்ந்து வருவதாக வருவாய்த் துறையினா் தெரிவித்துள்ளனா்.