ஒத்திகை செய்யாமல் படப்பிடிப்புக்குச் செல்ல மாட்டேன்: கமல்ஹாசன்
Hydrogen Bomb: `ஹிரோஷிமாவை விட 700 மடங்கு ஆபத்து' - கார்வின் கண்டுபிடிப்பு; 50 ஆண்டுகள் ரகசியம் ஏன்?
50 ஆண்டுகள் வெளியே சொல்லாத ரகசியம்
உலகின் முதல் ஹைட்ரஜன் வெடிகுண்டைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி ரிச்சர்ட் எல்.கார்வின் (Richard L Garwin) கடந்த மே 13-ம் தேதி தனது 97-வது வயதில் மரணித்துள்ளார்.
கார்வின் தனது 70 ஆண்டுகால ஆராய்ச்சி வாழ்கையில் பல மருத்துவ மற்றும் கணினி தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். பிரபஞ்சத்தின் கட்டமைப்பு பற்றிய நுண்ணறிவுக்கான அடித்தளத்தை உருவாக்கியிருக்கிறார்.
இவையெல்லாவற்றையும் விட உலகின் விதியை மாற்றியமைக்கும் ஒரு கண்டுபிடிப்பை உருவாக்கி, கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் அதைப் பற்றி வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்துள்ளார்.

கார்வின் (Richard L Garwin)
21 வயதில் முனைவர் பட்டம் பெற்ற கார்வின், 23 வயதில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிப்பாளராகவும், நியூ மெக்ஸிகோவில் உள்ள லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்தில் ஆலோசகராகவும் பணியாற்றி வந்தார்.
1951-52 களில் இயற்பியலாளர் எட்வர்ட் டெல்லர் மற்றும் கணிதவியலாளர் ஸ்டானிஸ்லாவ் உலாமின் கோட்பாடுகளைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் குண்டை வடிவமைத்தார். சோதனையின் போது இதற்கு ஐவி மைக் எனக் குறியீடாக பெயர் வைத்திருந்தனர்.
சக்திவாய்ந்த வெடிகுண்டு
பசிபிக் தீவு நாடான மார்ஷல் தீவுகளில் இதன் சோதனை நடந்தது. அந்தநாள் வரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டதிலேயே சக்திவாய்ந்த வெடிகுண்டு இதுதான். ஹிரோஷிமாவில் போடப்பட்டதை விட 700 மடங்கு அதிக பாதிப்பைத் தரக் கூடியது என கணிக்கின்றனர்.
ஐவி மைக் சோதனையின்போது குண்டு விழுந்த இடத்தில் 1.9 கி.மீ அகலமும் 50மீ ஆழமும் கொண்ட பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஐவி மைக் சோதனை ரகசியமாக மேற்கொள்ளப்பட்டாலும் இதுகுறித்த செய்திகள் வெளியில் கசிந்து உலக நாடுகளை அச்சுறுத்தியது.
இந்த சோதனையில் கார்வினின் பங்கு ரகசியமாக வைக்கப்பட்டது சில அரசு, ரணுவ மற்றும் உளவு அதிகாரிகள் தவிர யாருக்கும் அவரைப்பற்றித் தெரியாது.
கார்வின் அப்போது தனது 20-களில் இருந்ததுடன் மிகவும் மூத்த அறிவியளாலர்களுடன் பணியாற்றினார். 50-களில் அமெரிக்கா - ரஷ்யா இடையிலான பனிப்போர் உச்சத்தில் இருந்தது.
மிக முக்கியமாக ராணுவ தொழில்நுட்பத்தில் இரண்டு நாடுகளும் போட்டிப்போட்டுக்கொண்டிருந்த சூழலில் அறிவியலாளர்கள் குழுவில் இருந்த அத்தனை பேரின் பெயர்களையும் வெளியிடுவது பாதுகாப்பு சிக்கல்களை எழுப்பலாம் எனக் கருதப்பட்டது.
இந்த காரணங்களால் நீண்டகாலத்துக்கு எட்வர்ட் டெல்லர்தான் ஹைட்ரஜன் குண்டை உருவாக்கியவராக கருதப்பட்டு வந்தார். 1981-ம் ஆண்டுதான் ஹைட்ரஜன் குண்டு உருவாக்கம் தொடர்பாக முதல்முறையாக கார்வினைப் பாராட்டினார் டெல்லர்.
நியூயார்க் டைம்ஸுக்கு பேட்டியளித்த அவர், "கார்வினின் வடிவமைப்பின் படி, துல்லியமாக சோதனை நடத்தப்பட்டது" என்று கூறியிருக்கிறார். 22 ஆண்டுகள் எட்வர்ட் டெல்லர் ஹைட்ரஜன் குண்டை கார்வின் வடிவமைத்தார் என்பதை ஒப்புக்கொண்டது கவனம் பெற்றது. ஆனால் அப்போதும் கார்வின் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.
1984-ம் ஆண்டு எஸ்கொயர் பத்திரிகைக்கு பேட்டியளித்த கார்வின், ஹைட்ரஜன் குண்டு விஷயத்தில் அங்கீகாரம் கிடைக்காதது குறித்துப் பேசியுள்ளார். "ஹைட்ரஜன் குண்டை உருவாக்குவது உலகின் மிக முக்கியமான விஷயம் என்று நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை, அல்லது அந்த நேரத்தில் என் வாழ்க்கையிலும் அது முக்கியமானதாக இல்லை" எனக் கூறினார்.
டெல்லரின் நண்பரான ஜார்ஜ் ஏ கீவொர்த் II என்பவர் 2001-ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு ஒரு டேபை அனுப்பினார். அதன்பிறகு எல்லாமும் மாறியது.
இளம் இயற்பியலாளரான கார்வினின் பங்களிப்பை டெல்லர் அங்கீகரித்தாலும், அதுகுறித்த சிறப்பு குறிப்புகள், கூட்டங்களில் கார்வினின் பெயர் காணமல்போயிருப்பது தெரியவந்தது. ஒரே நாளில் உலகமே கார்வினைத் திரும்பிப் பார்த்தது.
அமெரிக்காவின் மிகப் பெரிய விருது
அமெரிக்காவின் மிகப் பெரிய அறிவியல் விருதான நேஷனல் மெடல் ஆஃப் சயின்ஸ் 2002-ம் ஆண்டு கார்வினுக்கு வழங்கப்பட்டது. 2016-ம் ஆண்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவால் உயர்ந்த குடிமகன் விருதான, ஜனாதிபதி சுதந்திர பதக்கம் வழங்கப்பட்டது.

உலகமே வியக்கும் ஹைட்ரஜன் குண்டை கண்டுபிடித்துவிட்டு 50 ஆண்டுகள் அதை ரகசியமாக வைத்திருந்த கார்வின், இந்த இடைப்பட்ட காலத்தில் 40 ஆண்டுகள் ஐ.பி.எம்மில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அத்துடன் தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அரசு ஆலோசகராக செயல்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதிகள் டுவைட் டி ஐசனோவர், ஜான் எஃப் கென்னடி, லிண்டன் பி ஜான்சன், ரிச்சர்ட் எம் நிக்சன், ஜிம்மி கார்ட்டர் மற்றும் பில் கிளிண்டன் ஆகியோருக்கு ஆலோசகராக இருந்துள்ளார்.