கும்பமேளாவுக்கு முஸ்லிம் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! 11ஆம் வகுப்பு மாணவர் கைது!
உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள கும்பமேளாவுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 11ஆம் வகுப்பு மாணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
முஸ்லிம் நண்பர் பெயரில் சமூகவலைதளத்தில் போலி கணக்கைத் தொடங்கி கும்பமேளாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்போவதாகப் பதிவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் பிப். 26 வரை மகா கும்பமேளா கொண்டாடப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மாநில அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.
இந்நிகழ்வில் சுமார் 40 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என மாநில அரசு சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 50 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்களுக்கு டிஜிட்டல் வருகைப் பதிவை அறிமுகம் செய்து, உரிய பயிற்சியும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மகா கும்பமேளாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 11 ஆம் வகுப்பு மாணவரை (வயது 17) காவல் துறையினர் கைது செய்தனர்.
இவர் அண்டை மாநிலமான பிகாரைச் சேர்ந்தவர். பிகாரின் புர்னியா மாவட்டத்திற்குட்பட்ட ஷாதிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த மாணவர், ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது.
தனது வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம் நண்பருடன் பள்ளியில் ஏற்பட்ட பிரச்னைக்காக அவர் பெயரில் போலி கணக்கைத் தொடங்கி சமூகவலைதளத்தில் கும்பமேளாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கவுள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து கும்ப மேளா காவல் துறை சிறப்பு கண்காணிப்பாளர் ராஜேஷ் திவேதி தெரிவித்துள்ளதாவது, ''கும்ப மேளா காவல் துறை சிறப்புக் குழுவினர், சைபர் பிரிவின் உதவியுடன் சமூகவலைதளத்தில் பதிவிட்டவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் 11ஆம் வகுப்பு மாணவர்.
பள்ளியில் தனது வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர் பெயரில் போலி கணக்கைத் தொடங்கி, கும்ப மேளாவுக்கு வருகைதரும் பக்தர்களில் சுமார் 1,000 பேரை வெடிகுண்டு வைத்துக் கொல்வேன் எனப் பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மூன்று கூட்டுக் குழுக்கள் விசாரணை மேற்கொண்டது. இதன் முடிவில், 17 வயது மாணவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டது கண்டறியப்பட்டு பிரயாக்ராஜுக்கு அழைத்துவரப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு ஜாமீனில் அவர் அனுப்பிவைக்கப்பட்டார்'' எனக் கூறினார்.