கும்பமேளா பயணிகள் பேருந்து விபத்து: 30 பேர் காயம்!
மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு திரும்பிய பேருந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
தகத்கரில் உள்ள கோசெலாவ் பகுதியைச் சேர்ந்த பயணிகள் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பஞ்சாப் செல்லும் சாலையில் பேருந்தின் பிரேக் கோளாறு ஏற்பட்ட நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
பேருந்தில் 46 பயணிகள் இருந்தனர். அதில் 30 பேர் காயமடைந்த நிலையில், மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அனைவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
தகவல் கிடைத்ததும், சார்புஜா காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சார்புஜா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றன.
காயமடைந்தவர்களில் 18 பேர் சார்புஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இருவர் உயர் மருத்துவச் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். லேசான காயங்களுடன் இருந்த எட்டு பேர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.
பலத்த காயமடைந்தவர்களில் அமித் குமாரின் மகன் 10 வயது ஓம் என்பவரும், இந்த விபத்தில் அவர் கையை இழந்துள்ளார். காயமடைந்த மற்ற பயணிகளில் ஆஷிகா, தமன்னா, மதுரா பென், போமராம், சுமர்சிங், பார்வதி, சங்கீதா, ஃபல்குனி, ஜோதி, ராஜுபாய், நிலன், பிராச்சி, பவேஷ், பியாரி தேவி, டக்கு தேவி, நிமித், ஜஷோதா மற்றும் மூலி தேவி ஆகியோர் அடங்குவர்.
சம்பவத்திற்குப் பிறகு கும்பல்கர் துணை காவல் கண்காணிப்பாளர் ஞானேந்திர சிங் மற்றும் அவரது குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.